
தில்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதமே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தில்லியில் ஷஹதாரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி அடுக்ககத்தில் வெள்ளிக்கிழமை (அக். 18) காலை 5.25 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்ககத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து ஏற்பட்டு, ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகே தீயணைப்பு அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் அடுக்ககத்தில் வசித்து வந்த 42 வயதான ஷில்பி குப்தா, அவரது மகன் பிரணவ் குப்தா இருவரின் உடல்களையும் எரிந்த நிலையில் மீட்டுள்ளனர்.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால்தான் இருவர் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவர்கள் வருவதற்குள் இரண்டு தளங்களும் எரிந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.
இருப்பினும், குறுகிய பாதைகளில் வருவது சிரமம் என்பதால்தான் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது ``மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும், மூச்சுத் திணறல் காரணமாகவே இருவரும் உயிரிழந்திருக்கக் கூடும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.