ஸ்டார் ஹெல்த் நிறுவன 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்கப்பட்டதா?

ஸ்டார் ஹெல்த் நிறுவன வாடிக்கையாளர்களின் தரவுகள் விற்கப்பட்டது பற்றி... சிறப்புச்
data leak
Published on
Updated on
2 min read

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல சுகாதார, ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தகவல்கள் கசிந்ததாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தகவல் வெளியானது.

ஹேக்கர்கள் சுமார் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடி சமூக வலைதளமான டெலிகிராமில் கசியவிட்டுள்ளதாகத் முதலில் தகவல்கள் வந்தன. அதில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, தொடர்பு எண், பான் எண், உடல்நிலை குறித்த விவரங்கள் (7.24 டிபி அளவு தகவல்கள்) இருந்துள்ளன.

இதையடுத்து ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ஹேக்கருக்கு 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை விற்றுள்ளார் என கடந்த வாரம் தெரியவந்தது.

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி அமர்ஜீத் கனுஜா என்பவர், சென்ஸென்(xenZen) என்ற சீன ஹேக்கர் இணையதளத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பேரம் பேசி தரவுகளை விற்றுள்ளார். பின்னர் அமர்ஜீத், கூடுதல் தொகை கேட்கவே, ஹேக்கர் தகவல்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.

அமர்ஜீத்திடம் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பெற்றதாகவும் அவர் கூடுதல் தொகையை கோருவதாகவும் சீன ஹேக்கர் தனது இணையதளத்திலே பதிவிட்டார். இதன் பின்னரே இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இதுகுறித்து ஸ்டார் ஹெல்த் நிறுவனம், தங்கள் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் முதலில் தெரிவித்தது.

பின்னர், ஹேக்கரிடம் இருந்து தலைமை நிர்வாக அதிகாரிக்கு மின்னஞ்சல் வருவதாகவும் வாடிக்கையாளர்களின் தரவுகளை மீட்க 68,000 டாலர் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(IRDAI) இதுகுறித்து தீவிர விசாரணையைத் துவங்கியுள்ளது.

'வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்தது மிகவும் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம், காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் தரவு பாதுகாப்புக் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும், சைபர் பாதுகாப்பில் உள்ள குறைகள் ஆராய்ந்து நிவர்த்தி செய்யப்படும்' என்று ஆணையம் தெரிவித்துள்ளது

மேலும் முதற்கட்டமாக ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திடம் இதுகுறித்து தணிக்கை அறிக்கை கேட்டுள்ளது ஆணையம். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ஆகாஷ் அம்பானி

இதனிடையே புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜியோ நிறுவனத் தலைவர் ஆகாஷ் அம்பானி, 'இந்தியர்களின் தரவுகள் பாதுகாப்பாக இங்கேயே இருக்க வேண்டும், இந்திய பயனர்களின் தரவுகளை சேமிக்க இந்தியாவிலேயே தரவு மையங்களை உருவாக்க வேண்டும், தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதால் தரவு பாதுகாப்பு கொள்கை, 2020-ஐ மேம்படுத்த வேண்டும்' என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

காங்கிரஸ் விமர்சனம்

ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளது குறித்து, 'இந்திய மக்களின் தரவுகள் பாதுகாப்பாக இல்லை' என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கேரள காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், 'இந்திய பயனர்களின் தரவுகள், இந்தியாவிலே இருக்க வேண்டும். பணத்திற்காக இந்த உலகத்திற்கு விற்கப்படக்கூடாது.

இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு இல்லை. தனிப்பட்ட தகவல்கள், நிதி மற்றும் முதலீடு குறித்த தகவல்கள், வருங்கால வைப்பு நிதி(பி.எப்.), வேலைவாய்ப்பு என அனைத்து விவரங்களையும் எவரொருவரும் ஒரே ஒரு ஏபிஐ(API) அழைப்பு மூலமாக பெறலாம். இதற்கு ஒடிபி அல்லது எந்த அனுமதியும் பயனர்களிடமிருந்து தேவையில்லை. பயமாக இருக்கிறது, ஆனால் இதுதான் உண்மை!' என்று கூறியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு

சுமார் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சீன நிறுவனத்துக்கு விற்ற ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இணையதள பாதுகாப்பு ஆய்வாளரான ஹிமான்ஷூ பதக் தொடர்ந்த வழக்கு கடந்த அக். 14 ஆம் தேதி நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் உடல்நிலை குறித்த தனிப்பட்ட விவரங்களை அந்த நிறுவனத்தின் அதிகாரிகள், சீன இணையதளத்துக்கு விற்றுள்ளது மிகப்பெரிய மோசடி. எனவே, இதுகுறித்து புலன் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஸ்டார் ஹெல்த் நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதுதொடர்பாக மத்திய அரசின் விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அக். 17 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று கூறி நீதிபதி, வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ஸ்டார் ஹெல்த் தரவு மீறல் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தரவுகள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

2006ல் தொடங்கப்பட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 850 கிளை அலுவலங்களையும் 6.80 லட்சம் நிறுவன முகவர்களையும் கொண்டுள்ளது. சுமார் 14,000 மருத்துவமனைகளில் ஸ்டார் ஹெல்த் காப்பீடு இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வருவாய் 12,000 கோடி ரூபாய்.

இந்நிலையில் தகவல்கள் விற்கப்பட்டது குறித்து வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com