விடியோ அழைப்பு மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட்! புது ஸ்டைலில் ஆன்லைன் பண மோசடி!

விடியோ அழைப்பு மூலமாக 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் பெயரில் நடைபெறும் ஆன்லைன் பணமோசடிகள் பற்றி...
cyber crime / digital arrest
சித்திரிக்கப்பட்டதுENS
Published on
Updated on
4 min read

அனுராக் சிங்

தொழில்நுட்பம் எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ அதே அளவுக்கு அதன் மூலமான எதிர்மறையான விளைவுகளும் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய வகையில் நடந்துகொண்டிருக்கின்றன.

அந்தவகையில், எவ்வளவுதான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலும் இணையவழி ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

அந்தவகையில் இப்போது 'டிஜிட்டல் அரெஸ்ட்' அல்லது 'இணையவழி காவல் / கைது' என்ற புதிய நூதன மோசடி அண்மைக்காலமாக வேகமாக அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த வகை ஆன்லைன் மோசடி உலகளவில் நடந்துவந்தாலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில்தான் பெருமளவில் அதிகரித்துள்ளது.

தொழிலதிபர், ஓய்வு பெற்ற அதிகாரி, விஞ்ஞானி, போலீஸ் அதிகாரி, வழக்கறிஞர் என நன்கு படித்தவர்களே இந்த மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை இழந்து தவிக்கின்றனர்.

இணையவழி காவல் / கைது

இந்த வகை ஆன்லைன் மோசடி பெரும்பாலும் விடியோ அழைப்பில்தான் தொடங்குகிறது. மோசடி கும்பல், தங்களை சிபிஐ, காவல்துறை என முக்கிய அமைப்புகளில் உள்ள அதிகாரிகள் என்று கூறி ஸ்கைப் அல்லது வாட்ஸ்ஆப் மூலமாக முதலில் விடியோ காலில் அழைக்கின்றனர்.

பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், மனிதர்களைக் கடத்தி வைத்திருத்தல் உள்ளிட்ட செயல்களில் நீங்களோ அல்லது உங்களது நெருங்கிய உறவினரோ ஈடுபட்டதாகக் கூறிப் பல மணி நேரம் ஆன்லைனில் விசாரணை நடத்துகின்றனர். தங்களது விசாரணை முடியும் வரை ஆன்லைனில் இருக்க வேண்டும், அழைப்பைத் துண்டிக்கக் கூடாது என்று கூறி ஒரு தனி அறையில் இருக்க வைக்கின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் இந்தக் குற்றத்தில் இருந்து உங்களை விடுவிக்க வேண்டும் என்றாலோ அல்லது ஜாமீன் வேண்டும் என்றாலோ பணம் அனுப்பக் கோருகின்றனர். பின்னர் 'வங்கிக் கணக்கில் உள்ள பணம் சரியான முறையில்தான் ஈட்டப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறி ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்ப வைக்கின்றனர்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி அவர்களின் வங்கிக்கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் தங்கள் வங்கிக்கணக்கிற்கு மாற்றுகின்றனர். அல்லது அவருடைய உறவினர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி சிலரை நேரடியாகவே மிரட்டி பணத்தைப் பெறுகின்றனர்.

இதற்காக சில மணி நேரங்களிலிருந்து சில நாள்கள் வரையிலும் அவர்களை ஆன்லைனில் காத்திருக்க வைக்கின்றனர். மேலும் இதுகுறித்து யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்றும் மிரட்டிப் பணம் பெறுகின்றனர். பணம் அனுப்பியதும் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்துவிடுகின்றனர்.

இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.

மோசடி கும்பல் தங்களை சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, ஆர்பிஐ, ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்று கூறுவதுடன், அதற்கான சீருடைகளும் அணிந்து அடையாள அட்டை மற்றும் ஆவணங்களையும் காட்டுகின்றனர், தங்களுடைய அறைகளையும் அந்த குறிப்பிட்ட அலுவலகங்கள் போன்றே அமைத்துக்கொள்கின்றனர். ஏன், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கான கைது வாரண்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் போலியாகத் தயார்செய்துகொள்கின்றனர். தாங்கள் உண்மையான அதிகாரிகள் என நம்பும் அளவுக்கு அவர்கள் நடந்துகொள்வதுதான் மக்கள் ஏமாறுவதற்கு எளிதாக அமைந்துவிடுகிறது.

சில வழக்குகள்

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் பெற்ற, பத்ம பூஷண் விருதுபெற்ற தொழிலதிபர் எஸ்.பி. ஓஸ்வால் (வர்த்தமான் குழும இயக்குநர்) இந்த மோசடியில் சிக்கி ரூ. 7 கோடியை இழந்துள்ளார்.

அவர் பணமோசடி செய்ததாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு என்று கூறி ஆன்லைனில் இருக்கவைத்து விசாரணை செய்து தீர்ப்பும் அளித்துள்ளனர். தீர்ப்புக்குப் பின்னர் ஓஸ்வால் பணத்தையும் அனுப்பியுள்ளார். மக்களுக்குத் தெரிந்த முகம் என்றால், அதாவது நீதிபதிகள் போன்று தோற்றமளிப்பதற்கு அவர்கள் டீப் - பேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

கடந்த வாரம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 71.33 லட்சத்தை இழந்துள்ளார். அவரையும் அவரது மனைவியையும் சுமார் 6 நாள்கள் டிஜிட்டல் காவலில் வைத்து மிரட்டிப் பணம் பறித்துள்ளனர்.

இதேபோல பெங்களூரில் பெண் வழக்கறிஞர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கு என்று கூறி டிஜிட்டல் காவலில் வைத்ததுடன் 'போதைப்பொருள் சோதனை' என்ற பெயரில் நிர்வாணமாக நிற்க வைத்து அதனை பதிவு செய்துள்ளனர். 2 நாள்கள் ஆன்லைனில் இருக்க வைத்து மிரட்டி கைதிலிருந்து தப்பிக்க ரூ. 14 லட்சம், நிர்வாண விடியோவை வெளியே விடாமல் இருக்க ரூ. 10 லட்சம் எனப் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னெளவில் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, கடந்த ஜூலை மாதம் ஓர் எழுத்தாளர் - கவிஞரை 6 மணி நேரம் டிஜிட்டல் காவலில் வைத்து விசாரித்துள்ளனர். அந்த 6 மணி நேரமும் கவிதை சொல்ல வற்புறுத்தியதன்பேரில் அவர் கவிதை கூறியுள்ளார். அறைக்குள் வந்து இதனைக் கவனித்த அவரின் மருமகள், உடனடியாக அழைப்பைத் துண்டித்ததால் அவரது சேமிப்பு தப்பியது. பின்னர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரே இதில் சிக்கி ரூ. 2 கோடியை பணப் பரிமாற்றம் செய்துள்ளார். சைபர் கிரைமில் ஏற்கெனவே புகார் வந்த ஒரு வங்கிக் கணக்கிற்கு காவல்துறை அதிகாரியின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் வருவதை அறிந்த சக அதிகாரி ஒருவர், உடனடியாக போனில் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். இதனால் அந்த காவல்துறை அதிகாரி உடனே விடியோ அழைப்பைத் துண்டித்துவிட்டுப் பணத்தை அனுப்பாமல் தப்பித்துள்ளார்.

கூரியர் நிறுவனங்கள்

இந்த மோசடிக்கு பெட்எக்ஸ் (FedEx) போன்ற கூரியர் நிறுவனங்களை பயன்படுத்துகின்றனர். சம்பந்தப்பட்டவர்களின் பார்சல்கள், விமான நிலையத்தில் அல்லது துறைமுகத்தில் போதைப்பொருள் தடுப்பு அமைப்பிடமோ அல்லது அதிகாரிகளிடமோ சிக்கியுள்ளதாகக் கூறி தனிப்பட்ட விவரங்களைப் பெறுகின்றனர்.

இதையடுத்து, போன் அழைப்புகள், மின்னஞ்சல் மூலமாக பெட்எக்ஸ் நிறுவனம் தனிப்பட்ட விவரங்கள் எதையும் பெறவில்லை, இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அந்த நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கியில் அதிகமாக பணம் வைத்திருப்பவர்களைத் தொடர்ச்சியாகக் கவனித்தே இதுபோன்ற செயல்களில் மோசடிக் கும்பல்கள் ஈடுபடுகின்றன. அந்த பிரபலங்களின் உதவியாளர்கள் சிலரும் இதுகுறித்த தகவல்களை இந்த மோசடி கும்பலுடன் பகிர்வதாக அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

யாரெல்லாம் குறிவைக்கப்படுகிறார்கள்?

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்தான் இதில் அதிகம் குறிவைக்கப்படுவதாக உத்தரப் பிரதேச காவல்துறையில் பணியாற்றிய சைபர் கிரைம் நிபுணரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பேராசிரியர் திரிவேணி சிங் கூறுகிறார். அதிர்ச்சித் தகவலாக இந்த மோசடி கும்பலில் பெண்களும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் மட்டுமின்றி மருத்துவர்கள், பொறியாளர்கள், ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள், பிற அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், சமீபத்தில் மருத்துவக் கல்லூரியின் முதுகலை மாணவர் உள்பட அனைத்து வயதினரும் ஏமாற்றப்பட்டுள்ளதாக இந்தூர் காவல்துறை குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி. ராஜேஷ் தண்டோடியா கூறுகிறார்.

சமீபமாக டிராய் (TRAI) அதிகாரிகள் என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபடுவதாகவும் பெண்களை நிர்வாண விடியோ வைத்துள்ளதாகக் கூறி மிரட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வதாகவும் கூறினார்.

மேற்குவங்கம், தில்லியிலும் இந்த மோசடிகள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விசாரணை

2023 சைபர் கிரைம் வழக்கு ஒன்றில் திஹார் சிறையில் ஏற்கெனவே நீதிமன்றக் காவலில் இருந்த தில்லியைச் சேர்ந்த ராகேஷ் சிங், சச்சின் சங்வான் என 2 இளைஞர்கள் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தில்லியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ. 5 லட்சம் ஏமாற்றிப் பறித்துள்ளனர்.

வர்த்தமான் குழுமத் தலைவரை ஏமாற்றிய வழக்கில், மேற்கு வங்கம் மற்றும் அசாமைச் சேர்ந்த 2 பேர் பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ரூ. 5.25 கோடியை மீட்டுள்ளனர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.

இந்தூரில் 2024, பிப்ரவரி முதல் மட்டும் 28 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ரூ. 2.5 கோடி மோசடி செய்துள்ளனர். இதில் வங்கிக் கணக்குகளை முடக்கி 65 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக இந்தூர் குற்றப்பிரிவு காவல்துறை கூறுகிறது.

'இந்த மோசடி கும்பல், பணத்தை பரிமாற்றம் செய்ய ஏழை மக்கள், வேலையில்லாதவர்களின் வங்கிக் கணக்குகளையும் பயன்படுத்துகிறார்கள். ஒரே மொபைல் எண்ணுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்குகள் ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், தில்லி, மகாராஷ்டிரத்தில் மும்பை மற்றும் புணே, தெலங்கானாவின் ஹைதராபாத் என 8 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளது.

விழிப்புணர்வு

சைபர் குற்றப்பிரிவு காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஏற்கெனவே இதுகுறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சிபிஐ, அமலாக்கத் துறை, காவல்துறையினர், நீதிபதிகள் ஒருபோதும் ஆன்லைனில் விசாரணை செய்ய மாட்டார்கள், 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற ஒரு நடைமுறையே கிடையாது, இதுபோன்ற விடியோ அழைப்புகளை நம்ப வேண்டாம், அவ்வாறு அழைப்புகள் வரும்பட்சத்தில் 1930 அல்லது www.cybercrime.gov.in. என்ற இணையதளத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்திய சைபர் குற்றப்பிரிவு ஒருங்கிணைப்பு மையம் அறிவுறுத்துகிறது.

எனவே, இனிவரும் காலங்களில் இதைவிட எளிதாகவும் வெவ்வேறு வகையிலும் ஆன்லைன் மோசடிகள் நடைபெறும் வாய்ப்பு அதிகம் என்பதால் மக்களாகிய நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதில் மட்டும் மாற்றமில்லை.

தமிழில்: எம். முத்துமாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com