நவ. 1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்? முன்கூட்டியே மிரட்டல்

ஏர் இந்தியா விமானங்களுக்கு நவ. 1 - 19 வரை வெடிகுண்டு மிரட்டல்!
நவ. 1 முதல் ஏர் இந்தியா விமானங்களில் பயங்கரவாதத் தாக்குதல்? முன்கூட்டியே மிரட்டல்
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியா விமானங்களில் நவ. 1 முதல் 19 வரையிலான காலக்கட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

என்ன சொல்ல வருகிறார் குா்பத்வந்த் சிங் பன்னுன்?

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாட்டுக் குடியுரிமை பெற்ற குா்பத்வந்த் சிங் பன்னுன், தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியா்கள்’ அமைப்பின் தலைவராவார். பயங்கரவாத குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா்.

இந்த நிலையில், ஏர் இந்திய விமானங்களில் செல்வதைத் தவிர்க்குமாறு பயணிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில், வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை, ஏர் இந்தியா விமானங்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற மிரட்டல் பதிவை இன்று (அக்.21) அவர் விடுத்துள்ளார்.

சீக்கியப் படுகொலைகள் நிகழ்ந்து 40 ஆண்டுகள் ஆவதையொட்டி, ஏர் இந்தியா விமானங்களில் மேற்கண்ட பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டும், நவம்பர் மாத காலகட்டத்தில் அவர் இதே பாணியில் எச்சரிக்கை விடுத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

கடந்தாண்டு நவம்பரில், பன்னுன் வெளியிட்ட விடியோ பதிவில், புதுதில்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும், இல்லையெனில் நவ. 19-ஆம் தேதி விமான நிலையம் மூடப்படும் சூழல் உருவாகலாம் என்று சூசகமாக எச்சரித்திருந்தார்.மேலும், அந்நாளில் பயணிகள் ஏர் இந்தியா விமானங்களில் செல்வதைத் தவிர்க்குமாறும் எச்சரித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தில், நாடாளுமன்றக் கட்டடம் மீது டிசம்பர் 13-ஆம் தேதிக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தார். குடியரசு தினத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கும் அவர் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு எதிரான பொருளாதார தாக்குதலாகவே மேற்கண்ட மிரட்டல் நடவடிக்கைகள் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் வெடிகுண்டு மிரட்டல்கள் பயணிகளிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com