

வயநாடு தொகுதியில் தனது சகோதரியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்ய முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா அக். 23ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதையொட்டி, கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவை திங்கள்கிழமை தில்லியில் சந்தித்து ஆசி பெற்றாா்.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். அவா் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்காவின் தாயாா் சோனியா காந்தி, சகோதரா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் உடன் இருப்பாா்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் ரே பரேலி, கேரளத்தில் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா்.
ரே பரேலி தொகுதியைத் தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதுதொடர்பான ராகுலின் எக்ஸ் பதிவில்
வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று அவர் கூறினார்.
பிரியங்கா வயநாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்பவராகவும், நாடாளுமன்றத்தில் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்.
மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், காலை 11 மணிக்கு கல்பெட்டா புதிய பேருந்து நிலையத்திலிருந்து ராகுலும், பிரியங்கா காந்தியும் பேரணியில் ஈடுபடுவார்கள்.
பேரணியில் மக்களும் கலந்துகொள்ள வலியுறுத்துவதாகவும், வயநாடு தொகுதியில் அன்புடன் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்வோம் என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து வரும் பிரியங்கா, முன்னதாக ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியான வயநாடு தொகுதியிலிருந்து விலகியதையடுத்து, முதல் முறையாகத் தேர்தலில் களம் காண்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.