
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் டானா புயலானது ஒடிசா அருகே கரையை கடக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், 2013ஆம் ஆண்டு ஒடிசாவை புரட்டிப்போட்ட பைலின் புயலின் நினைவில் மக்கள் உள்ளனர்.
டானா புயலை முன்னிட்டு, கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அக்.12ஆம் தேதி ஒடிசா அருகே கரையை கடந்த பைலின் புயலைப் பற்றித்தான் பலரும் பேசி வருகிறார்கள்.
இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதுவரை ஒடிசா சந்தித்திராத ஒரு புயலாக இது அமைந்திருந்தது. அந்த நேரத்தில் சுமார் 9 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். புயல் தாக்கத்தால் 15 பேர் பலியாகினர். 25 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.
தற்போது புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்படும் முதியவர்கள் பலரும், தங்கள் வாழ்நாளில், பைலின் புயலை மறக்கவே முடியாது என்றும், தங்களுக்கு என இருந்த வீட்டை முற்றிலும் அடித்துச்சென்று நிராதரவாக நிறுத்தியது அந்தப் புயல் என்றும் கண் கலங்கியபடி கூறுகிறார்கள்.
அதுபோன்றதொரு புயல் மீண்டும் எப்போதும் எங்கேயும் ஏற்படக் கூடாது என்றுதான் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்றும் கூறுகிறார்கள் பெண்கள் பலரும்.
டானா புயல் எங்கே இருக்கிறது?
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கு டானா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?
ஒடிசா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் டானா புயல் நிலைகொண்டுள்ளது. இது வியாழக்கிழமை (அக்.24) தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ஒடிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகா் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக டானா வெள்ளிக்கிழமை அதாவது அக்.25ஆம் தேதி காலை கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கைப் பணிகள் நடந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.