வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதன்கிழமை காலை புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 6 மணிநேரமாக மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை காற்றழுத்த மண்டலமாக உருவானது.
மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“ஒடிஸா மாநிலம் பாரதீப்புக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவுகளுக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்தின் கேப்புப்பாரா நகருக்கு தெற்கு - தென்கிழக்கே 630 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகா்ந்து, வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.24) தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
வடக்கு ஒடிஸா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகா் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக (டானா) மாறி வெள்ளிக்கிழமை (அக்.25) காலை கரையைக் கடக்கக்கூடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்தில் எவ்வித பாதிப்பும் கிடையாது.