மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவாPTI

யமுனையில் குளித்த பாஜக தலைவர் மருத்துவமனையில் அனுமதி!

யமுனை நதியில் குளித்த தில்லி பாஜக தலைவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
Published on

யமுனை நதியில் குளித்த தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா மூச்சுத் திணறல் மற்றும் அரிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தில்லி பாஜக தலைவரான வீரேந்திர சச்தேவா கடந்த வியாழக்கிழமை (அக். 24) சத் பூஜையின்போது யமுனை நதியில் குளித்தார்.

அந்த நதி மிகவும் அசுத்தமாக இருப்பதைக் குறிப்பிட்ட சச்தேவா தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2025 ஆம் ஆண்டுக்குள் யமுனையைச் சுத்தம் செய்வதாக உறுதியளித்ததாகவும் இது அவரது அரசின் தோல்வியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், “ஆம் ஆத்மி அரசு செய்த தவறுக்கு யமுனை நதியிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் யமுனை நதியைச் சுத்தம் செய்வதற்கு தனி ஆணையம் அமைக்கப்படும்” என்று சச்தேவா கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இரு நாள்களில் சச்தேவா உடலில் அரிப்பு மற்றும் தோலில் புண் ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு மூச்சு விடுவதிலும் சிறிது பிரச்சனை ஏற்பட்டதால் தில்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் அவருக்கு இதுபோன்ற உடல் பிரச்னைகள் இல்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு மூன்று நாள்களுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சச்தேவா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் இதுபோன்ற நாடகங்களால் நதி சுத்தமாகாது என பாஜகவினர் உணரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.

யமுனை நதியின் மேற்பரப்பு அதிகளவில் மாசுபட்டு ஒரு அடுக்கு அளவில் நச்சுத்தன்மை வாய்ந்த நுரை தோன்றியதைத் தொடர்ந்து யமுனை நதி மீதான அரசியல் தில்லியில் தீவிரமடைந்து, ஆளும் ஆம் ஆத்மி மற்றும் எதிர்க் கட்சியான பாஜக இடையே மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

பிஜேபி ஆளும் மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றில் கலக்க விடுவதால் யமுனையில் நச்சு நுரை ஏற்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com