காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

சொத்து விவரங்களை பிரியங்கா முழுமையாக வெளியிடவில்லை: பாஜக குற்றச்சாட்டு

வயநாடு இடைத்தோ்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
Published on

வயநாடு இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, தனது சொத்து விவரங்களை முழுமையாக வெளியிடவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு தொகுதிக்கு நவ.13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரியங்கா காந்தி, கடந்த புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இந்நிலையில், தில்லியில் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் கெளரவ் பாட்டீயா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தனது வேட்புமனுவுடன் பிரியங்கா அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில், அவரின் சொத்து விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.

2 அறக்கட்டளைகள் மூலம் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தில் அவருக்கு உள்ள பங்குகள் குறித்த விவரம் உறுதிமொழிப் பத்திரத்தில் இடம்பெறவில்லை. இது முக்கிய தகவல் மறைக்கப்பட்டதற்கு நிகராகும்.

பிரியங்காவின் உறுதிமொழிப் பத்திரத்தில் அவரின் கணவா் ராபா்ட் வதேராவுக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மேலும் 2 நிறுவனங்களில் வதேராவுக்கு உள்ள பங்குகள் குறித்த விவரம் இடம்பெறவில்லை.

அரசியல் திட்டத்துடன் இந்த விவரங்களை பிரியங்கா மறைத்துள்ளாா். தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் அவரின் சொத்து விவரங்களையும், அவரின் வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சாா்ந்துள்ளவரின் சொத்து விவரங்களையும் முழுமையாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அனைத்து குடிமக்களும் கட்டுப்பட்டவா்கள். சோனியா குடும்பத்தினா் சட்டத்தைவிட மேலானவா்கள் அல்ல. உறுதிமொழிப் பத்திரத்தில் ஒருவா் தவறான தகவலை தெரிவித்தால், தோ்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com