.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இந்தியர்களால் தயாரிக்கப்படும் அனிமேஷன்கள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, தற்போது நம் நாட்டில் வளர்ந்து வரும் அனிமேஷன் துறை மூலம் இளைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்.
பிரதமர் மோடி பேசியவை:
அதில், “தொலைக்காட்சியில் சோட்டா பீம் தொடங்கப்பட்ட நாளை நீங்கள் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பீர்கள். குழந்தைகளால் இதைக் கண்டிப்பாக மறக்க இயலாது. அது, பிற நாடுகளின் குழந்தைகளையும் மிகவும் கவர்ந்து இழுக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்.
இதைப் போலவே நமது மற்ற அனிமேஷன் தொடர்களான கிருஷ்ணன், அனுமன், மோடூ-பத்லூ போன்றவற்றை விரும்புவோர் உலகெங்கிலும் இருக்கிறார்கள். நம் நாட்டின் அனிமேஷன் பாத்திரங்கள், அனிமேஷன் திரைப்படங்கள், நமது உள்ளடக்கம், படைப்பாற்றல் ஆகியவை காரணமாக உலகெங்கிலும் இவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
நீங்களே கூட கவனித்திருக்கலாம், ஸ்மார்ட்ஃபோன் தொடங்கி வெள்ளித் திரை வரை, கணினி விளையாட்டுகள் முதல் மெய்நிகர் தொழில்நுட்பம் வரை, அனிமேஷன் என்பது எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறது. அனிமேஷன் உலகத்தில், நமது நாடு புதிய புரட்சியைப் படைக்கும் பாதையில் இருக்கிறது. நம் நாட்டின் கேமிங் துறையும் கூட மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
சில மாதங்கள் முன்பாக, நாட்டின் முன்னணி கேமர்களை நான் சந்தித்தேன். இந்திய விளையாட்டுக்களின் ஆச்சரியம் கொள்ளவைக்கும் படைப்புத்திறன் மற்றும் தரம் பற்றித் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடிந்தது. உண்மையிலேயே, நம் தேசத்தில் படைப்பாற்றல் அலை ஒன்று வீசிக் கொண்டிருக்கிறது.
அனிமேஷன் உலகில் இந்தியத் தயாரிப்புகள் விரவிக் கிடக்கின்றன. நமது பாரதத்தின் திறமைகள், அயல்நாட்டுத் தயாரிப்புகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கலாம். இப்போதிருக்கும் ஸ்பைடர்மேன், ட்ரான்ஸ்ஃபார்மர் ஆகிய படங்களில் ஹரிநாராயண் ராஜீவின் பங்களிப்பினை மக்கள் மிகவும் மெச்சியிருக்கிறார்கள்.
இந்தியாவின் அனிமேஷன் ஸ்டூடியோக்கள், டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸைப் போல உலகின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன.
இன்று நமது இளைஞர்கள் நமது கலாச்சாரம் தொடர்பான இந்திய உள்ளடக்கங்களைப் பிரதிபலிக்கும் பல படங்களைத் தயாரித்து வருகின்றனர். இவை உலகம் முழுக்கப் பார்க்கப்பட்டு வருகின்றன. அனிமேஷன் துறை இன்று பல துறைகளுக்கு பலமூட்டி வருகின்றது. எடுத்துக்காட்டாக, இப்போது வீஆர் டூரிஸம் மிகவும் பிரபலமாகி வருகிறது. நீங்கள் மெய்நிகர் சுற்றுலா வாயிலாக, அஜந்தாவின் குகைகளுக்குச் சென்று பார்க்கலாம். கோணார்க் ஆலயத்தில் உலவலாம். வாராணசியின் படித்துறைகளில் ஆனந்தமாகச் சுற்றலாம். இவை அனைத்தையும் நமது படைப்பாளிகள் தயார் செய்திருக்கின்றார்கள். வீஆர் வசதி மூலம் இந்த இடங்களைக் காணும் அனைவரும், நிஜத்திலும் இந்தச் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள்.
இன்று இந்தத் துறையில் அனிமேஷன் நிபுணர்களுடன் கதை சொல்பவர்கள், எழுத்தாளர்கள், குரல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், கேம் டெவலப்பர்கள், வீஆர் மற்றும் ஏஆர் வல்லுநர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
ஆகையால், நம் நாட்டு இளைஞர்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுடைய படைப்புத் திறனுக்கு இறக்கைகளை அளியுங்கள். உலகின் அடுத்த சூப்பர்ஹிட் அனிமேஷன் உங்களுடைய கணினி கூட தோன்றலாம். யார் அறிவார்கள். அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொள்ளும் அடுத்தப் படைப்பு உங்களுடையதாக இருக்கலாம். கல்விசார் அனிமேஷன்களில் உங்களுடைய புதுமையான யோசனைகள் பெரும் வெற்றியை ஈட்டலாம்.
வரும் அக்டோபர் 28ஆம் தேதி, அதாவது நாளைய தினம் உலக அனிமேஷன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாருங்கள், நாம் பாரதத்தை உலக அனிமேஷன் துறையின் ஆற்றல் மையமாக மாற்றும் உறுதிப்பாட்டை ஏற்போம்" என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.