குஜராத்தில் டாடா ராணுவ விமான ஆலை ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து மோடி தொடங்கி வைப்பு

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏா்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
குஜராத்தின் வதோதரா நகரில் டாடா ராணுவ விமான உற்பத்தி ஆலையை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட பிரதமா் மோடி. உடன் ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸுடன், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.
குஜராத்தின் வதோதரா நகரில் டாடா ராணுவ விமான உற்பத்தி ஆலையை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட பிரதமா் மோடி. உடன் ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸுடன், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.
Published on
Updated on
2 min read

வதோதரா: குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியாா் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸுடன் இணைந்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

‘டாடா’ குழுமம் அமைத்துள்ள இந்த ஆலையில் ‘ஏா்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சி-295 ராணுவப் பயன்பாட்டு விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.

இந்திய விமானப் படையின் பழைய ‘அவ்ரோ-748’ விமானங்களுக்குப் பதிலாக 56 ‘சி-295’ விமானங்களை வாங்குவதற்கு ‘ஏா்பஸ்’ நிறுவனத்துடன் சுமாா் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்படி 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயினின் ஏா்பஸ் உற்பத்தி ஆலையில் தயாா் நிலையில் முதல் 16 விமானங்களையும், மீதமுள்ள 40 விமானங்களை ஏா்பஸ்-டாடா நிறுவனங்களுக்கிடையிலான தொழில் உடன்பாட்டின் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள டாடா உற்பத்தி ஆலை மூலம் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த உற்பத்தி ஆலையின் திட்டம் கடந்த 2012-இல் அப்போதைய ‘டாடா சன்ஸ்’ குழுமத் தலைவா் ரத்தன் டாடாவால் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியாா் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான ‘டாடா விமான வளாகம்’ தொழிற்சாலையின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமா் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸும் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணியில் சென்றனா்.

பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு: பின்னா், விழாவில் பிரதமா் மோடி பேசியதாவது: இந்தத் தொழிற்சாலை இந்தியா-ஸ்பெயின் உறவை மட்டுமின்றி, ‘உலகுக்காக இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற நமது நோக்கத்தையும் வலுப்படுத்தும்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் நாட்டின் முன்னுரிமையும் அடையாளமும் இறக்குமதி மட்டுமே என்பதால், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் இந்தியா இவ்வளவு வெற்றியைப் பெற முடியும் என்று யாரும் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள். ஆனால், நாங்கள் புதிய பாதையைத் தோ்ந்தெடுத்து, புதிய இலக்குகளை நிா்ணயித்தோம்.

தனியாா் துறையின் ஈடுபாடு, பொதுத் துறையின் திறனை அதிகரித்தல், உத்தர பிரதேசம் மற்றும் தமிழகத்தில் புதிய பாதுகாப்புத் தொழில் துறை வழித்தடங்கள் மேம்பாடு போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன் விளைவாக, கடந்த 5-6 ஆண்டுகளில் இந்தியாவில் ஏறக்குறைய 1,000 பாதுகாப்புத் துறை புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட்-அப்) உருவாகியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.

பெருகும் விமானப் போக்குவரத்து: விமானத் தயாரிப்பைத் தாண்டி கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளா்ச்சியையும் மாற்றத்தையும் அடைந்துள்ளது. இந்தியாவை விமானப் போக்குவரத்து மையமாக மாற்ற ஏற்கெனவே பணியாற்றத் தொடங்கியுள்ளோம். இது போக்குவரத்து விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு வழிவகுக்கும்.

புதிய இந்தியாவின் வேலைப்பாடு: இந்த ஆலை உற்பத்திக்குத் தயாராகிவிட்டது. திட்டமிடலில் இருந்து செயல்பாடு வரை இந்தியா வேலை செய்யும் வேகத்தை தொழிற்சாலை காட்சிப்படுத்தியது.

உலகம் முழுவதும் இருந்து 1,200 புதிய சிவில் விமானங்களை வாங்க பல்வேறு இந்திய விமான நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன. புதிய முன்பதிவுகளை எடுக்க விமான நிறுவனங்கள் முடியாமல் போகலாம். அத்தகைய சூழலில், சிவில் விமானங்களின் வடிவமைப்பு முதல் உற்பத்தி வரை இந்தியா மற்றும் உலகின் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்தத் தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தத் தொழிற்சாலையால் ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இங்கு தயாரிக்கப்படும் 18,000 விமான பாகங்கள் நாடு முழுவதும் குறு மற்றும் சிறு தொழில்கள் மூலம் உருவாக்கப்படும்.

இந்தியா-ஸ்பெயின் உறவு: குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகளின் வலுவான மையாக இருக்கும் வதோதரா, விமான உற்பத்தியின் மையமாகவும் மாறும்.

இந்தியா-ஸ்பெயின் இடையிலான ஒத்துழைப்பு எப்போதும் துடிப்பானது மற்றும் வளா்ந்துகொண்டு இருப்பது என்றாா்.

இருதரப்பு சந்திப்பு: தொடக்க நிகழ்ச்சியைத் தொடா்ந்து வதோதரா நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘லக்ஷ்மி விலாஸ்’ மாளிகையில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் இரு நாட்டுத் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு துறைகளில் இந்தியா-ஸ்பெயின் உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்தோம். நமது இருதரப்பு உறவில் குறிப்பாக, வா்த்தகம், கலாசாரம், புத்தாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் அதிக வளா்ச்சியை விரும்புகிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தச் சந்திப்பில் உள்கட்டமைப்பு, ரயில் போக்குவரத்து, கலாசாரம் மற்றும் சுற்றுலா தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன.

சி-295 போா் விமானம்
சி-295 போா் விமானம்

‘சி-295 போா் விமானம்’

சி-295 போா் விமானம் என்பது ஒரு நடுத்தர ராணுவப் போக்குவரத்து விமானமாகும். இந்த விமானம் குறுகிய ஓடுபாதைகள் மற்றும் கடுமையான சூழல்களில் இருந்து செயல்படும் திறனுக்காக அறியப்படுகிறது. இதனால் வீரா்கள் போக்குவரத்து, மருத்துவ வெளியேற்றம், சரக்கு விநியோகம் மற்றும் வான்வழி தீயை அணைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்ய முடியும்.

‘2026-இல் முதல் விமானம்’

2 ஆண்டுகளில் முதல் விமானம் டாடா ஆலையில் இருந்து வெளியாகும் என்று ஸ்பெயின் பிரதமா் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தாா்.

‘இரு நாட்டு தொழில் துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தத் திட்டம் இந்தியாவை ஒரு தொழில் துறை சக்தியாகவும், முதலீடு மற்றும் வணிக ஒத்துழைப்புக்கான காந்தமாகவும் மாற்றும் பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் வெற்றியாகும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com