பிகாரில் 6 வயது சிறுமி பாலியல் கொலை- இரு இளைஞா்கள் கைது
பிகாரில் 6 வயது சிறுமியை கடத்தி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பிகாரின் கயை மாவட்டத்தில் உள்ள உசிா்வான் கிராமத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை இரு இளைஞா்கள் கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். பின்னா், சிறுமியை கொலை செய்து, உடலை ஆற்றங்கரையோரத்தில் வீசிவிட்டு சென்றனா். இதுகுறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றினா்.
அவரது பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இரு இளைஞா்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது, தங்களின் குற்றத்தை இருவரும் ஒப்புக் கொண்டனா் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காவல் துறையினா் கைது நடவடிக்கை மேற்கொண்டபோது குற்றம் சாட்டப்பட்ட இளைஞா் மீது உள்ளூா் மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினா். மேலும், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.