நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சிகரெட் வழங்கப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, தங்களுக்கும் சிகரெட் வழங்க வேண்டும் என்று ஹிண்டலகா மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் நடத்தினர்.
ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டுடன் தேநீர் அருந்துவது போன்ற அவரது புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து, பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
கைதிகள் போராட்டம்
நடிகர் தர்ஷனின் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிறைக் கைதிகளையும் விட்டுவைக்கவில்லை.
கர்நாடக மாநிலம், பெலகாவியில் உள்ள ஹிண்டலகா மத்திய சிறையில் உள்ள கைதுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகரெட் மற்றும் புகையிலை பொருள்கள் கேட்டு போராட்டம் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிகரெட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கும் வரை போராடுவோம் எனத் தெரிவித்த கைதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை உணவை புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதுபோன்ற போராட்டம் நடக்கவில்லை என்றும், சமூக வலைதளங்களில் புரளி கிளம்பியுள்ளதாகவும் சிறைத்துறையின் வடக்கு மண்டலத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
சிறையில் அதிரடி சோதனை
ஹிண்டலகா மத்திய சிறையில் போதைப் பொருள்கள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, பெலகாவி காவல் ஆணையர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, சுமார் 200 காவலர்கள் கொண்ட குழுவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த சோதனையில், கைதிகள் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருள்கள், சிகரெட் மற்றும் சிறைக்குள் அங்கீகரிக்கப்படாத சில பொருள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.
சிறைத்துறை அதிகாரிகள் உஷார்
நடிகர் தர்ஷனுக்கு சலுகைகள் வழங்கிய சம்பவத்தில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஹிண்டலகா, பெல்லாரி உள்ளிட்ட சிறைகளில் காவல்துறை அதிகாரிகள் உஷார் நிலையில் இருப்பதாகவும், கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட பொருள்கள் கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.