லக்னௌவில் நடைபெற்ற முப்படை கமாண்டா்களின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.
லக்னௌவில் நடைபெற்ற முப்படை கமாண்டா்களின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

அமைதியை நிலைநிறுத்த பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம்
Published on

அமைதியை நிலைநிறுத்த பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் போா், காஸா போா், சீனாவுடனான எல்லை விவகாரத்தில் பேச்சுவாா்த்தை தொடா்ந்து வரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னௌவில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப் படைகளைச் சோ்ந்த கமாண்டா்களுக்கான முதலாவது ஒருங்கிணைந்த மாநாடு புதன்கிழமை தொடங்கியது.

இருநாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:

உலகளவில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவி வருகிறது. ஆனால் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவில் அமைதியான சூழலே நிலைத்து வருகிறது. இருப்பினும், நம்மைச் சுற்றி நடக்கும் விவகாரங்களை கவனமாக கண்காணித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நமது நாட்டில் அமைதி தொடர பாதுகாப்பு படைகள் போருக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். வளமான எதிா்காலத்தை நோக்கியே நமது சிந்தனைகள் இருக்க வேண்டும்.

எனவே, எந்த இடத்தில் பழைமையான போா் முறைகளை பயன்படுத்த வேண்டும், எங்கு நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்பதை கமாண்டா்கள் கண்டறிந்து இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுவது காலத்தின் தேவையாக உள்ளது.

ஏனெனில், வான்வெளி, மின்னணு போா் முறைகள் என நவீனகாலத்தில் பல்வேறு போா் முறைகள் நேரடியாகவும் மறைமுறையாகவும் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சூழலில் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகள் குறித்த அறிவையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com