
காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டது.
இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி இடம்பெறாது என்பதை உறுதி செய்யும் வகையில், ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஹரியாணா மாநில ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுஷில் குப்தா, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக ஆம் ஆத்மி நேர்மையுடன் காத்திருந்தது. விரைவில் இரண்டாவது பட்டியலும் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் இன்று மாலைக்குள் இறுதி செய்யாவிட்டால், 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ஹரியாணா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தற்போது 20 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியிருக்கிறது.
அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கூட்டணி அமையுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில், உள்ள அனைத்து 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே போட்டியிட்டாலும், கடுமையாக உழைக்க கட்சித் தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும் குப்தா தெரிவித்திருந்தார். 90 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 12 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.