
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வெளியீடான ஐபோன் 16 ஸ்மார்ட்போன்கள் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது புதிய ஐபோன் 16 மாடலை நேற்று (செப். 9) வெளியிட்டது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் போன்ற வகைமைகளை வெளியிட்ட ஆப்பிள் நிறூவனம் அவற்றுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 போன்ற சாதனங்களையும் வெளியிட்டது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆப்பிள் நுண்ணறிவு செயல்திறன் மூலம் செயல்படும் புதிய ஐபோன் மாடல்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதுடன், பயனுள்ள மற்றும் பொருத்தமான நுண்ணறிவை வழங்குவதற்காக தனிப்பட்ட சூழலைப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்பிளின் ஐபோன் 16 மாடல்கள் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் உலகத் தரம் வாய்ந்த சாதனங்களை இந்தியா தயாரிக்கிறது என்று அமைச்சர் அஸ்வின் வைஷ்னவ் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொத்த ஐபோன் உற்பத்தியில் 14 சதவீதமாக இந்தியாவின் பங்கை அடுத்த ஆண்டுக்குள் 25 சதவீதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் தொழிற்சாலைகள் மூலம் இந்தியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் பண்டிகை காலங்களில் கூடுதலாக 10,000 பேரை ஆப்பிள் நிறுவனம் வேலைக்கு அமர்த்த உள்ளது.
இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 5 கோடி ஆப்பிள் ஐபோன்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், சீனாவில் உள்ள தொழிற்சாலைகளை இங்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐபோன் 16 மாடல்கள் தவிர்த்து, ஐபோன் 17 மாடல்களின் தயாரிப்பையும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தொடரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுக்க ஏற்படும் அரசியல் மாற்றங்கள் மற்றும் விநியோகச் சங்கிலியின் நிச்சயமற்றத் தன்மைகளால் எந்த ஒரு நாட்டையும் நம்பியிருக்கும் அபாயங்களைக் குறைக்கும் முடிவில் ஆப்பிள் நிறுவனம் இத்தகைய முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.