
பிரதமர் மோடி திறந்து வைத்த வணிக மைய கட்டடத்தில் எதிர்பார்ப்பைவிட குறைவாகவே வணிக நிறுவனங்கள் இருப்பதாகக் கூறி, பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அலுவல் கட்டடம் என்ற பெயர் பெற்ற அமெரிக்க ராணுவ அலுவலகமான பென்டகனையே விஞ்சி நிற்கிறது குஜராத் வைர வணிக மைய கட்டடம். இந்த நிலையில், இந்த வணிக மைய கட்டடத்தில், தற்போது 8 நிறுவனங்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சூரத் வைர வணிக மையத்தின் நிலையை விமர்சித்த கேரள காங்கிரஸினர், தங்களுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ``"மோடியின் வேனிட்டி திட்டம் கோஸ்ட் ஹவுஸாக மாறுகிறது. உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டடமாக காட்சிப்படுத்தப்பட்ட சூரத் வைர வணிக மையம், ரூ. 3200 கோடி செலவில் 7.1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டது. 4500 அலுவலகங்களின் திறனுடன், இந்த தீபாவளிக்குள் 1000 வைர நிறுவனங்கள் வளாகத்திலிருந்து செயல்படத் திட்டமிடப்பட்டது.
இருப்பினும், இப்போதைக்கு, இங்கிருந்து 8 நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகின்றன. சூரத் மற்றும் மும்பையை தளமாகக் கொண்ட வைர வர்த்தகர்கள், இங்கு வர்த்தகம் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டனர். ஆகையால், சிலர் இடம் பெயர்ந்தனர்; இருப்பினும், சிரமங்களை எதிர்கொண்ட பலர் மும்பைக்கே திரும்பி விட்டனர்.
ஒளிரும் கட்டமைப்புகளைக் கட்டுவதே வளர்ச்சியாகக் கருதுகிறார்போல மோடி. இந்த வெள்ளை யானை விரைவில் சிதைவடையக் கூடும். இது மோடியின் பிரம்மாண்டமான, ஆனால் வெற்று விகாஸ் திட்டங்களின் மற்றொரு அடையாளமாக நிற்கிறது’’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், சூரத் வைர வணிக மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, இந்தாண்டு தீபாவளிக்குள் அதிகமான வர்த்தகர்கள் இங்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம், அவர்கள் மும்பையில் உள்ள பாரத் வைர வணிக மையத்தில் இருந்து, இங்குள்ள வைர வணிக மையத்திற்கு நடவடிக்கைகளை மாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறினார்.
இதுதவிர, சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சூரத் வைர வணிக மையம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பேருந்துகள், ஆட்டோ ரிக்ஷாக்கள், உணவகங்கள், மருந்துக் கடைகள் போன்ற வசதிகள் இல்லை என்று கூறினார்.
சூரத் நகருக்கு அருகேயுள்ள கஜோத் கிராமத்தில் சூரத் வைர வணிக மையத்தை பிரதமர் மோடி, கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதியில் வைத்தார். 2024 ஆம் ஆண்டு தீபாவளிக்குள் சூரத் வைர வணிக மையத்தில் இருந்து, சுமார் 1000 வைர நிறுவனங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் வரையில், 250 நிறுவனங்கள் சூரத் டைமண்ட் பங்குச் சந்தைக்கு மாறிய நிலையில், அவற்றில் பெரும்பாலானவை ஆகஸ்ட் மாதத்துக்குள் வெளியேறி விட்டன.
உலகில் உற்பத்தியாகும் மொத்த வைரத்தில், 90 சதவிகித வைரம் சூரத் நகரில்தான் செரிவூட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட சூரத் நகரின் மகுடமாக கருதப்படும் இந்த அலுவல் வளாகம், 35 ஏக்கர் நிலப்பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட அலுவல் கட்டடங்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
இந்த வைர வணிக மையத்தில் 131 மின்தூக்கிகள், சில்லறை விற்பனைக் கூடங்கள், உணவகங்கள், அரங்குகள் என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தின் எந்த நுழைவாயிலில் இருந்தும் வெறும் 7 நிமிடங்களில், எந்த அலுவலகத்தையும் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.
இந்த கட்டடத்தின் பாதி அறைகள், இயற்கை முறையில் குளிரூட்டப்படும் வகையிலும், சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.