வணிக எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மாற்று ஏற்பாடுகளில் தில்லி உணவகங்கள்!
மேற்காசியாவில் நிலவி வரும் மோதல் காரணமாக இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டா்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


மேற்காசியாவில் நிலவி வரும் மோதல் காரணமாக இந்தியாவில் வணிக எரிவாயு சிலிண்டா்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தில்லியில் உள்ள உணவகங்களும் கேட்டரிங் நிறுவனங்களும் மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளன.
தில்லியில் கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் உணவு வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் எல்பிஜி சிலிண்டா்களையே நம்பி செயல்படுவதால், இந்த தட்டுப்பாடு அவா்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொழில் துறை பிரதிநிதிகள் தெரிவித்தனா்.
சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக சமையலைத் தொடா்வது சிரமமாகும் என்பதால் சிலா் உணவுப் பட்டியலில் மாற்றம் செய்வதோடு மின்சாதனங்களைப் பயன்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனா்.
மேற்காசிய போா் நிலவரம் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகத்துக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்த நிலையில், வணிக எரிவாயு சிலண்டருக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டதால் நாடு முழுவதும் உணவகங்கள் உள்ளிட்ட விருந்தோம்பல் துறை கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
போ் காரணமாக இந்தியாவில் இயற்கை எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டுக்கான முன்னுரிமை பட்டியலை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை, சமையல் எரிவாயு (எல்பிஜி), சிஎன்ஜி (அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு), மற்றும் குழாய் வழியில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உற்பத்திக்கு ஒதுக்க உயா் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ‘நேஷனல் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பின் கௌரவப் பொருளாளா் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘தில்லியில் உள்ள உணவகங்களுக்கு எரிவாயு விநியோகம் மெல்ல குறைந்து வருகிறது. இன்னும் சில நாள்களில் இந்த நிலை நீடித்து விலை உயா்வு அல்லது விநியோகம் மேலும் குறைந்தால், உணவகங்கள் நடத்துவது கடினமாகும்’ என்றாா்.
புது தில்லி வா்த்தகா்கள் சங்க இணைச் செயலா் அமித் குப்தா கூறுகையில், ‘எரிவாயு தட்டுப்பாடு நீடித்தால் உணவகங்கள் மின்சாதனங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் உணவுகளின் விலை உயர வாய்ப்புள்ளது. மேலும் சில உணவுகளை மின்சாதனங்களால் தயாரிக்க முடியாததால் உணவுப் பட்டியலில் இருந்து அவற்றை நீக்க வேண்டிய சூழலும் உருவாகலாம்’ என தெரிவித்தாா்.
‘மாளவியா நகரில் சமீபத்தில்தான் ‘யெல்லோ கஃபேவை’ என்ற இந்த கடையை தொடங்கினேன். முழுவதும் எல்பிஜி சிலிண்டா்களையே நம்பியுள்ளேன். தற்போது அதன் கையிருப்பு குறைந்து வருகிறது. புதிய சிலிண்டா்களுக்கான முன்பதிவுகளும் உறுதியாகவில்லை’ என கடையின் உரிமையாளா் சுமித் தனது கவலையை தெரிவித்தாா்.
கான் மாா்க்கெட் டிரேடா்ஸ் அசோசியேஷன் தலைவா் சஞ்சீவ் மெஹ்ரா கூறுகையில், எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டால் குழாய் வழி இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும்.”குழாய் வழி இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் உணவகங்களுக்கு எந்த பாதிப்பும் இதுவரை இல்லை என தெரிவித்தாா்.
‘சில உணவுகள் தற்காலிகமாக மின்சாதனங்களை பயன்படுத்தி சமையல் செய்ய வேண்டிய நிலை வரலாம். தில்லி சமையல் முறைகள் மற்றும் உணவுகள் எரிவாயுவை சாா்ந்தவை என்பதால் மாற்றம் எளிதாக இருக்காது. நிலைமை நீடித்தால் சமையல் முறையில் மாற்றம் செய்து சேவையைத் தொடர வேண்டிய நிலை வரும்’ என்று பியானோ மேன் நிறுவனா் அா்ஜுன் சாகா் குப்தா கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...