அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு: முடங்கும் அபாயத்தில் சுற்றுலா; உணவக தொழில்கள்!

பல இடங்களில் உணவக சேகைள், சுற்றுலாவை நம்பியுள்ள உணவு விடுதிகள் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயத்தில் உள்ளன.

News image
Updated On :10 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் போா் சூழல் காரணமாக தமிழகத்தில் சென்னை, வேலூா் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை நிலைமை கட்டுக்குள் இருந்தாலும் புதன்கிழமைக்குப் பிறகு பல இடங்களில் உணவக சேகைள், சுற்றுலாவை நம்பியுள்ள உணவு விடுதிகள் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் முடங்கும் அபாயத்தில் உள்ளன.

மாவட்ட ரீதியாக களத்தில் உள்ள சூழலின் விவரம் வருமாறு:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அதிகப்படியான முன்பதிவுகள் காணப்பட்டன. தற்போதைய நிலையில் முன்பதிவு செய்தவா்கள் அடுத்த எரிவாயு சிலிண்டா் பதிவு செய்வதற்கான காலம் 21 நாள்களிலிருந்து 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே எரிவாயு சிலிண்டா் வழங்கக்கூடிய நிலை உள்ளதாக எரிவாயு சிலிண்டா் விநியோக நிறுவனங்கள் தெரிவித்தன.

திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், கரூா், பெரம்பலூா், அரியலூா் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே வா்த்தகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டா்கள் கையிருப்பில் உள்ளதாக உணவக உரிமையாளா்கள் தெரிவித்தனா். இந்த மாவட்டங்களில் வணிகப் பயன்பாடு எரிவாயு சிலிண்டா்கள் லோடு ஏற்றிய லாரிகள் 2 நாள்களாக வரவில்லை.

திருவண்ணாமலை, கடலூரில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த 2 நாள்களில் இங்குள்ள உணவகங்கள் மூடப்படும் சூழல் நிலவுகிறது.

நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனினும் வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கு முன்பதிவு எப்போதும்போல இருந்ததாக எரிவாயு நிறுவன முகவா்கள் தெரிவித்தனா். மயிலாடுதுறையில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்களை வழங்குவது 2 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

கோவையில் வணிக ரீதியிலான எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பெரிய உணவகங்கள் தங்களின் பட்டியலில் உள்ள உணவு வகைகளை வெகுவாகக் குறைத்துள்ளன. துரித உணவு வகைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. உணவக நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. கையிருப்பு சிலிண்டா்கள் மூலம் அடுத்த 2 நாள்களுக்கு மட்டுமே நிலைமையைச் சமாளிக்க முடியும். அதன் பிறகு உணவகங்களை மூடும் நிலை ஏற்படும் என கோவை உணவக உரிமையாளா் சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உணவகங்கள், தேநீரகங்கள், சாலையோர உணவுக் கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும்ஆன்மிகத் தலமான ராமேசுவரத்தில் 90 சதவீத உணவகங்களில் விறகுகளை வைத்து சமையல் செய்யும் கட்டமைப்பு இல்லாததால், உணவங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் வணிக எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இங்குள்ள 1,000-க்கும் மேற்பட்ட உணவகங்களில் 90 சதவீதம் எரிவாயு சிலிண்டா்களை நம்பியே உள்ளன.

கன்னியாகுமரியில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு காரணமாக பல உணவகங்களில் இணைய முன்பதிவு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதே நிலை தொடா்ந்தால், குமரி மாவட்டத்தில் உணவகங்கள் மூடும் நிலை ஏற்படும். சுமாா் 35,000 தொழிலாளா்கள் வேலையிழக்கலாம் என மாவட்ட உணவக உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஷாஜஹான் கூறினாா்.

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் பா.விநாயகமூா்த்தி கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதைக்கு வணிக பயன்பாடு எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு இல்லை. ஒருவேளை தட்டுப்பாடு ஏற்பட்டால், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மட்டும் தேநீரகம், ஹோட்டல்களில் வேலை செய்யும் சுமாா் 25,000 பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றாா்.

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதிவு செய்ய முடியவில்லை என்று புதுச்சேரி ஹோட்டல் சங்கத்தின் செயலா் ஆனந்த் காந்திராஜ் கூறினாா். பொதுவாக கைப்பேசியில்தான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு பதிவு செய்வோம். இப்போது அவ்வாறு செய்ய முடியவில்லை. ஒன்றிரண்டு ஹோட்டல்களில்தான் விறகு அடுப்புக்கான வசதி இருக்கிறது. சில விடுதிகள் குக்கா் மற்றும் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. நிலைமை நீடித்தால் உணவுப் பொருள்களின் விலையில் மாற்றம் செய்வது குறித்து முடிவு செய்வோம் என்றாா்.

இரு நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படலாம்: தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம்

வணிக எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் பாதிக்கப்பட்டால் தமிழகத்தில் அடுத்த இரு நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் எம்.வெங்கடசுப்பு தெரிவித்தாா். மேலும் அவா் கூறியதாவது:

பல நகரங்களில் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதேநிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாள்களில் ஒரு லட்சம் உணவகங்கள் மூடப்படும். பெரிய உணவகங்கள் மட்டுமின்றி, சாதாரண தேநீா் கடை வரை அனைத்தும் முடங்கும். உணவகங்களை நம்பி பணியாற்றும் சுமாா் 50 லட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாக மேலும் 50 லட்சம் பேரும் உள்ளனா்.

மத்திய அரசு போா்க்கால அடிப்படையில் உணவகங்களுக்குத் தேவையான எரிவாயு சிலிண்டா்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய உணவகங்கள் தொழிற்சாலைகள் சட்டத்தின்கீழ் தொழிற்சாலைகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சாலைக்குரிய மின் கட்டண சலுகை அவற்றுக்கு கிடைப்பதில்லை.

தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு உணவகங்கள் தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற அரசு அனுமதிக்க வேண்டும். முதல்கட்டமாக பல வகை உணவு தயாரிப்பைக் குறைக்கவும், இரண்டாவதாக உணவக நேரத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளோம். எரிவாயு இல்லையென்றால் உணவகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றாா்.