
ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் காட்டிய அலட்சியத்தால், கருப்பையிலேயே குழந்தை இறந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாம்ஷெட்பூரில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையான எம்ஜிஎம் மருத்துவமனையில், பெண் ஒருவர் மகப்பேறுக்காக, ஆக. 31 ஆம் தேதியில் காலை 8 மணியளவில் சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாத காரணத்தால், அந்த பெண்ணை 27 மணிநேரத்திற்கும் மேலாக, தரையில் படுக்க வைத்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் காட்டிய மருத்துவ அலட்சியத்தாலும் கருப்பையிலேயே குழந்தை இறந்துள்ளது.
அப்போதும்கூட, இறந்த குழந்தையை அகற்றாமல், மருத்துவமனையில் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அவரது கணவர் ஆர்யன் ஹோ, தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, குறைந்தபட்சம் இறந்த கருவையாவது அகற்றுமாறு மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார்.
இதனையடுத்து, ஒரு சமூக ஆர்வலரின் தலையீட்டால், மருத்துவமனையில் புகாரளிக்கப்பட்ட பின்னரே, இந்த கொடூர நிகழ்வு பொதுவெளியில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, இந்த வழக்கை கவனத்தில் எடுத்துக் கொண்டது. மேலும், இது சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையைக் கோரி, ஜார்கண்ட் அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாயின் உடல்நிலை, அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் வசதி மற்றும் பிற வசதிகள் பற்றிய விவரங்களும் இந்த அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, அதிகாரிகள் ஏதேனும் இழப்பீடு வழங்கியிருக்கிறார்களா என்பதையும் இந்த அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
மேலும், இந்த அறிக்கையை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.