அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
வாஷிங்டனில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய, ராகுல் காந்தி, ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டது குறித்து பதில் அளித்துள்ளார்.
'பொதுவாக ஜனநாயக நாட்டில் மக்களைத் தொடர்புகொள்ள பொதுவான சில கருவிகள் உள்ளன. ஆனால், அவை செயல்படாததால் அரசியல் ரீதியாக நேரடியாகச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவே எங்களுக்கு ஒரேவழியாக இருந்தது.
ஏனெனில் மக்களை தொடர்புகொள்ளக்கூடிய ஊடகங்கள் வேலை செய்யவில்லை, நீதிமன்றங்கள் செயல்படவில்லை, எதுவும் செயல்படவில்லை, எனவே நாங்கள் நேரடியாக சென்றோம். அது மிகவும் அழகாக வேலை செய்தது. இது அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் எனக்கு பலனளித்தது.
ஒரு தனி நபராக நான் எப்போதும் அதைச் செய்ய விரும்பினேன். சிறு வயதில் இருந்தே மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. நாடு முழுவதும் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ம் ஆண்டு இந்தியாவில் அரசியல் மாறிவிட்டது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இதுவரை பார்த்திராத அரசியலின் ஒரு கட்டத்திற்குள் நுழைந்தோம். அது ஆக்ரோஷமான, ஜனநாயகக் கட்டமைப்புகளின் அஸ்திவாரத்தைத் தாக்கியது. அது ஒரு தீவிரமான போர். தனிப்பட்ட முறையில் என்னையும் மாற்றியது.
2014-க்கு முன் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடக்க வேண்டும் என்றால் நான் சிரிப்பேன். ஆனால், நம் நாட்டில் எதிர்க்கட்சிகளுக்கு அதுதான் ஒரே வழி. ஊடகங்கள் ஒதுக்கப்பட்டன, நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன, மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிர்க்கட்சிகளைத் தாக்கின, அரசுகள் கவிழ்க்கப்பட்டன. எனவேதான் மக்களை நேரடியாக சந்தித்தோம்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, 'ஒற்றுமை நடைப்பயணம்' என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் ராகுல் காந்தி 4,000 கி.மீ. தூரத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார், அடுத்து மணிப்பூரில் இருந்து மகாராஷ்டிரம் வரை காரில் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.