இந்தியர்களைக் கடத்தி சைபர் அடிமைகளாக்கி மோசடி! சினிமாவை விஞ்சும் கும்பல்!!

கல்வி, வேலைக்காக செல்லும் இந்தியர்களைக் கடத்தி சைபர் அடிமைகளாக்கி மோசடி செய்யும், சினிமாவை விஞ்சும் கும்பல் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன.
சைபர் மோசடி கும்பல்கள்
சைபர் மோசடி கும்பல்கள்
Published on
Updated on
2 min read

நாட்டிலிருந்து கடந்த 2023 ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரையிலான காலக்கட்டத்தில் இணைய மோசடி வழியாக பறிக்கப்பட்ட தொகை ரூ.10,188 கோடி என்பதை தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் செயல்படும் சைபர் மோசடி கும்பல்கள் இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடியை மோசடி செய்திருப்பதாக இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற நாடுகளில், வேலை வாய்ப்பு இருப்பதாகக் கூறி, சுற்றுலா விசாவில் தமிழகம் உள்பட இந்தியாவிலிருந்து ஏராளமான இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சைபர் அடிமைகளாக நடத்தப்பட்டு, அவர்கள் மூலம் மோசடி செய்யப்படும் கும்பங்கள் குறித்தும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்கள், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் குடிசைத் தொழில் போல சைபர் அடிமைகளை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ஃபெட்எக்ஸ் முறைகேடு, முதலீட்டு முறைகேடு, போலியான செயலிகள் மூலம், திருமண பொருத்த செயலிகள், நட்பு வளர்க்கும் செயலிகள் போன்றவற்றை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

சைபர் அடிமைகளாக இந்த கும்பலிடம் சிக்கும் இளைஞர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை இவர்கள் பிடுங்கி வைத்துக்கொண்டு, தாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடித்துத் துன்புறுத்தப்படவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவர்களிடம் சிக்கிய பலரும், பெரிய தொகையை பிணையாகக் கொடுத்து தப்பி வந்திருப்பதும் அந்நாட்டு தூதரகங்கள் மூலம், அவர்கள் இந்தியா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

பல்வேறு மாநிலங்களிடமிருந்து தகவல்களைப் பெற்று இதுபோன்று சைபர் அடிமைகளாக இருக்கும் 1,285 பேரை மீட்கும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன. இவர்களில் 1,155 பேர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக அந்நாடுகளுக்குச் சென்று இந்த சைபர் குற்றவாளிகளிடம் சிக்கியிருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது. அதேவேளையில், திரும்பி வந்த 246 பேர் இந்தியாவுக்கு வந்தும்,இதுவரை எந்த புகாரும் கொடுக்கவில்லை.

தமிழகத்தில், சேலம், தஞ்சை உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து, சைபர் குற்றங்களில் ஈடுபடும் அமைப்புகளுக்காக சட்டவிரோதமாக ஆள் எடுக்கும் பணிகளை செய்து வந்த தரகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிகப்பெரிய மோசடி வலை

மோசடி கும்பலிடமிருந்து தப்பி வந்தவர்கள் கூறும் தகவலில், மிகப்பெரிய சுற்றுச்சுவர்களைக் கொண்ட வளாகத்துக்குள் இந்த மோசடி கும்பல் செயல்படுகிறது. தப்பிச் செல்வது இயலாது, பாஸ்போர்ட், செல்போன் எல்லாம் பிடுங்கிக்கொள்ளப்படும், அவர்கள் ஆன்லைன் மோசடி செய்ய துன்புறுத்தப்படுகிறார்கள். இல்லையென்றால் மின்சாரத்தில் உடலில் பாய்ச்சுவது, பட்டினி போடுவது உள்ளிட்ட பல கொடுமைகளை செய்கிறார்களாம்.

கம்போடியா, லாவோஸ் நாடுகளில் சாதாரண மக்களின் சிம் கார்டுகள், வங்கிக் கணக்குகளையே இந்த மோசடி கும்பல் மோசடிக்குப் பயன்படுத்துகின்றனவாம். முதலில், இந்திய வங்கிக் கணக்குகள் மூலம் பணத்தை மோசடி செய்து, அதனை கிரிப்டோகரன்சியாக மாற்றி, பிறகு தங்களது சொந்த நாட்டு வங்கிக் கணக்குக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த மோசடி கும்பல்கள் குறித்து, பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கும்பலிடம் சிக்கிய பலரும், பெரிய பெரிய தொகைகளை மோசடி கும்பலுக்கு அளித்த பிறகே தப்பி வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன

டிஜிபி அலுவலகம் - 9498654347

புலம்பெயர் தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அலுவலகத்தின் உதவி எண்கள்:

இந்தியாவில் இருக்கும் உறவினர்களுக்கு - 18003093793

வெளிநாட்டிலிருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு - 8069009901

மிஸ்டுகால் கொடுக்க - 8069009900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.