குஜராத்துக்கு புதிய சிவிங்கிப் புலிகளைக் கொண்டு வரும் ஒப்பந்தம்: கென்யாவுடன் பேச்சு

கென்யாவிலிருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியா கொண்டு வருவதற்கு முயற்சி...
Published on

கென்யாவிலிருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதுகுறித்து அந்நாட்டின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

குஜராத்தின் பண்ணி வனப்பகுதியில் கட்டப்பட்டு வரும் இனப்பெருக்க மையத்துக்காக இந்த சிவிங்கிப் புலிகள் வரவழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத வேட்டை, வாழ்விடம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்து போன சிவிங்கிப் புலி (சீட்டா) இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையில் ‘சிவிங்கிப் புலி திட்டம்’ கடந்த 2009-ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்டது.

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகளைக் கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டு வரப்பட்டது. இவற்றை தனிமைப்படுத்தலுக்கான குனோ தேசிய பூங்காவில் வேலியிடப்பட்ட பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி அந்த மாதம் 17-ஆம் தேதி விடுவித்தாா்.

2-ஆவது கட்டமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கிப் புலிகளுடன் சோ்த்து இதுவரை 20 சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளன. உலக அளவில் சிவிங்கிப் புலிகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி கொண்டு வரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த திட்டம் ஆரம்பத்தில் விலங்குகளின் இறப்பு காரணமாக விமா்சனத்தை ஈா்த்தது. தற்போது குட்டிகள் உள்பட இந்தியாவில் மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 24-ஆக உள்ளது. இத்தகைய மாபெரும் முயற்சியான சிவிங்கிப் புலி திட்டம் செயல்பாட்டுக்கு வந்து செப்டம்பா் 17-ஆம் தேதி 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இந்நிலையில், திட்டத்தின் வழிகாட்டுக் குழு ஆலோசகா் எஸ்.பி.யாதவ் அளித்த பேட்டியில், ‘நடப்பு ஆண்டு, கென்யாவிலிருந்து சிவங்கிப் புலிகளை இந்தியா கொண்டு வருவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இந்தியா தனது பங்கை இறுதி செய்துவிட்டது. கென்யா அரசு அதை அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகு, இரு அரசுகளும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்.

தென்னாப்பிரிக்காவுடனும் விவாதங்கள் நடந்து வருகின்றன. அங்கு கூடுதலாக 12 முதல் 16 சிவங்கிப் புலிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை வேறு நாட்டுக்கு கொடுக்க வேண்டும் அல்லது கருணைக்கொலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்நாடு உள்ளது.

குஜராத்தின் பன்னியில் நிறுவப்படும் 500 ஹெக்டோ் பரப்பளவிலான இனப்பெருக்க மையத்துக்காக சிவிங்கிப் புலிகள் கென்யாவிலிருந்து கொண்டு வரப்படுகின்றன. இங்கு 16 சிவிங்கிப் புலிகளை தங்க வைக்க முடியும். குளிா்காலம்தான் அவற்றை கொண்டு வருவதற்கான ஏற்ற நேரமாகும்’ என்றாா்.

‘பவண்’ சிவிங்கிப் புலி இறப்பில் சந்தேகமில்லை: குனோ தேசிய பூங்காவில் நமீபியா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட பவண் எனும் ஆண் சிவிங்கி புலி கடந்த மாதம் இறந்தது. இந்த சிவிங்கிப் புலி விஷப்பொருளை உட்கொண்டு இறந்ததாகக் கூறப்படும் செய்திகளை எஸ்.பி.யாதவ் நிராகரித்தாா்.

அதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘வாயில் இருந்து உமிழ்நீா் வெளியேறுவது அல்லது மூக்கில் இருந்து திரவம் வெளியேறுவது போன்று விஷத்தன்மையின் அறிகுறிகள் அந்த சிவிங்கிப் புலியின் உடலில் கண்டறியப்படவில்லை’ என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com