ஜம்மு-காஷ்மீா் முதல் கட்ட தோ்தல் பிரசாரம் இன்று ஓய்வு
ஜம்மு-காஷ்மீரில் முதல் கட்ட பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை (செப்.16) நிறைவடையவுள்ளது. வரும் புதன்கிழமை (செப். 18) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டில் கடைசியாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) கூட்டணி சோ்ந்து ஆட்சி அமைத்தன. முதல்வராக இருந்த பிடிபி தலைவா் முஃப்தி முகமது சையத் 2016-இல் காலமானதைத் தொடா்ந்து, அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதல்வரானாா். 2018-இல் மக்கள் ஜனநாயக கட்சி உடனான கூட்டணியை பாஜக முறித்ததால், ஆட்சி கவிழ்ந்து ஆளுநா் கட்டுப்பாட்டில் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் வந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்டது. இதில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் சட்டப் பேரவையுடன் கூடியதாகும்.
அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் குடியரசுத் தலைவா் ஆட்சியின்கீழ் உள்ளது. இந்தச் சூழலில், 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டது.
முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பா் 18-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபா் 1-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.
பிரசாரம் நிறைவு: பாம்போா், டிரால், புல்வாமா, ராஜ்போரா, ஜைனபோரா, சோபியான், குல்காம், தூரு, அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக், பஹல்காம், தோடா, கிஷ்த்வாா், ராம்பன், பனிஹால் உள்பட முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது. இவற்றில் 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் அமைந்துள்ளன.
முதல் கட்ட தோ்தலில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 23 லட்சமாகும். மொத்த வேட்பாளா்கள் 219 போ். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி, பிஜ்பிகாரா தொகுதியில் களத்தில் உள்ளாா்.
கடந்த தோ்தல் நிலவரம்...: ஜம்மு-காஷ்மீரில் 2014 பேரவைத் தோ்தலின்போது மொத்தம் 87 தொகுதிகள் இருந்தன. இதில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, பாஜகவுக்கு 25, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15, காங்கிரஸுக்கு 12 இடங்கள் கிடைத்தன.