நிகழாண்டு இறுதியில் ஜார்க்கண்ட்டில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், ஜமெஷ்ட்பூரிலுள்ள கோபால் மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய பிரதமருக்கு அம்மாநில பாரம்பரியத்தின்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழிற்சாலைகள் அதிகளவில் அமைந்துள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூரில் இன்று(செப்.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸின் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”ஜார்க்கண்ட்டில் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஈடுபட்டுள்ளது. சுரங்க ஊழல், கனிமவள ஊழல், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஜேஎம்எம்-க்கு விடைகொடுக்க வேண்டிய நேரமிது.
பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்ட்டில் காவலர் தேர்வில் இளம் தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும். ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு, பொய் வழக்குகளைப் பதிந்து பாஜக தலைவர்களை குறிவைக்கிறது. ஜார்க்கண்ட்டில் அரசின் தயவில் சில கும்பல்கள் அரசு வேலைகளை வியாபாரமாக்கி வருகின்றன” என்றார்.