ஹைதராபாத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் அடிமையான நிலையில், சொத்துக்காக மைத்துனரைக் கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
ஹைதராபாத்தில் ஸ்ரீகாந்த் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவர் சூதாட்டத்தில் பெரும் இழப்புகளை கண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது பணத் தேவைக்காக, தனது மைத்துனரான யஷ்வந்த்தை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
யஷ்வந்த்தை கொலை செய்வதன்மூலம், அவரது சொத்துகளை அபகரித்து விடலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, யஷ்வந்த்தை கொலை செய்வதற்காக, ரூ. 10 லட்சம் கொடுத்து, கூலிப்படையைச் சேர்ந்த இருவரையும் வரவழைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் நடத்தும் விடுதியில்தான் யஷ்வந்த் தங்கியிருந்ததால், யஷ்வந்த் அறைக்குள் கூலிப்படையினர் சென்று, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, கொலை வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, யஷ்வந்தின் கழுத்தில் துணியைச் சுற்றி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதுபோல பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.
இருப்பினும், யஷ்வந்தின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக, அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளையும், ஸ்ரீகாந்த்திடம் சோதனை மேற்கொண்டதிலும், தான் கொலை செய்ததை ஸ்ரீகாந்த் ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, ஸ்ரீகாந்தை காவல்துறையினர் கைது செய்தனர்.