பிரதமர் பதவியை மறுத்தாரா நிதின் கட்கரி?

2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் பதவி வாய்ப்புகள் வந்ததாக நிதின் கட்கரி பேச்சு
நிதின் கட்கரி (கோப்புப்படம்)
நிதின் கட்கரி (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பிரதமர் வேட்பாளராவதற்கு கிடைத்த ஆதரவுகளை மறுத்ததாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, நாக்பூரில் சனிக்கிழமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது ``எனக்கு ஒரு சம்பவம் நினைவிருக்கிறது. நீங்கள் பிரதமராகப் போகிறீர்கள் என்றால், நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம் என்று ஒருவர் கூறினார்; ஆனால், அவர் பெயரை நான் குறிப்பிடப் போவதில்லை.

பிரதமராக வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் இலக்கு அல்ல. ஆனால் நீங்கள் ஏன் எனக்கு ஆதரவளிக்க வேண்டும், உங்கள் ஆதரவை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டேன்.

நான் கொண்ட கொள்கைக்கும், கட்சிக்கும்தான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். பிரதமராக வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் குறிக்கோள் அல்ல’’ என்று தெரிவித்தார்.

இருப்பினும் 2019, 2024 மக்களவைத் தேர்தல்களின்போது, பிரதமர் வேட்பாளர் விவாதத்தில் நிதின் கட்கரியின் பெயரும் வெளிப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து, நரேந்திர மோடிக்குப் பிறகு பிரதமராக வர மிகவும் பொருத்தமான தலைவராக, நிதின் கட்கரி மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் விவாதத்தில் நிதின் கட்கரியின் பெயர் வெளிவந்தபோது, நிதின் கட்கரி கூறியதாவது ``இந்தியா என்பது பிரதமர் மோடியின் திறமையான கைகளில்தான் உள்ளது. நாம் அனைவரும் அவருக்கு பின்னால் இருக்கிறோம்.

அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில், நானும் ஒரு தொழிலாளி. நான் பிரதமராக வேண்டும் என்ற கேள்வி எங்கிருந்து எழுகிறது?

நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை. இந்த மாதிரியான கனவை நான் காண்பதில்லை’’ என்று தெரிவித்திருந்தார்.

நிதின் கட்கரி, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு மிகவும் நெருக்கமானவர். ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.

நிதின் கட்காரியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்த, ஆர்.எஸ்.எஸ். விரும்பியது. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ். இல்லாமல் பாஜக தனித்தே செயல்பட முடியும் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா, மக்களவைத் தேர்தலின்போது விமர்சித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com