ஓணம்: பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து
கேரள மாநிலத்தில் இன்று (செப். 15) ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ஓணம் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ``உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதரர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
ஒரு பெரிய இயற்கைப் பேரழிவின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம், நம்பிக்கையையும் வலிமையையும் கொண்டு வரட்டும்.
இந்த ஓணம், மலையாளிகளின் ஒற்றுமையையும் உயிர்வாழ்வையும் பிரதிபலிக்கட்டும்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிரதமர் மோடி, ``அனைவருக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எல்லா இடங்களிலும் அமைதி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிலவட்டும். இந்த திருவிழா கேரளத்தின் புகழ்பெற்ற கலாசாரத்தை கொண்டாடுகிறது’’ என்று வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் ``அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான ஓணம் வாழ்த்துக்கள். இந்த அழகான திருவிழாவின் மகிழ்ச்சியான உணர்வு உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்’’ என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ``மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்’’ என்று வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.