ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம்: சிவசேனை எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!

சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 11 லட்சம் வழங்குவேன் எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி / சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி / சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்
Published on
Updated on
1 min read

மும்பையில் சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ. 11 லட்சம் வழங்குவேன் எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் ஹெய்க்வாட் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “ராகுல் காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, இங்குள்ள இடஒதுக்கீடு முறையை முடிக்க விரும்புவதாகக் கூறினார்.

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் உண்மை முகம் வெளிவந்துள்ளது. இவ்வாறு பேசிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு சன்மானமாக ரூ. 11 லட்சம் வழங்குவேன்” என்று சர்ச்சையாகப் பேசினார்.

மேலும், "ராகுல் காந்தியின் கருத்துகள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மராத்தியர்கள், தங்கர்கள், ஓபிசி போன்ற சமூகங்கள் இடஒதுக்கீடு கோரி போராடுகின்றனர். ஆனால் அதற்கு முன், அதன் பலன்களை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்.

ராகுல் காந்தி அரசியலமைப்பு புத்தகத்தைக் காட்டி, பாஜக அதை மாற்றிவிடும் என்று போலி கதைகளை பரப்பினார். ஆனால், நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டது காங்கிரஸ் தான் " என்று அவர் பேசினார்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. சிவசேனை கட்சி எம்எல்ஏவின் சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரத்தின் பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, “கெய்க்வாட் கூறிய கருத்துகளை நான் ஆதரிக்கவோ, ஒப்புக்கொள்ளவோ மாட்டேன். ஆனால், நமது முதல் பிரதமர் நேரு இடஒதுக்கீடு முறை முன்னேற்றத்தை பாதிக்கும் என்று அதற்கு எதிராக இருந்ததை மறக்க முடியாது.

ராஜிவ் காந்தி இடஒதுக்கீட்டை முட்டாள்களை ஆதரிப்பதைப் போன்றது என்றார். ராகுல் காந்தி அதனை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்கிறார். நாம் இவர்களின் கருத்துகளை எஸ்சி, எஸ்டி, ஓபிசி மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்” என்று அவர கூறினார்.

மகாராஷ்டிரத்தின் புல்தானா தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ கெய்க்வாட் சர்ச்சைகளுக்குப் புதிதானவர் அல்ல. கடந்த மாதம் சிவசேனை எம்எல்ஏ ஒருவரின் காரை போலீஸ் அதிகாரி ஒருவர் கழுவும் விடியோ வைரலானது. அதுதொடர்பாக கருத்து தெரிவித்த கெய்க்வாட், போலீஸ் அதிகாரி காரில் வாந்தி எடுத்ததால் அவரே அதைத் துடைப்பதாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி, கெய்க்வாட் 1987 ஆம் ஆண்டில் புலியை வேட்டையாடி அதன் பல்லை எடுத்து தனது கழுத்தில் மாட்டியிருப்பதாகக் கடந்த பிப்ரவரியில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாநில வனத்துறை அவர் கழுத்தில் மாட்டியிருந்த பல்லை தடயவியல் துறைக்கு சோதனைக்கு அனுப்பி, கெய்க்வாட் மீது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com