புது தில்லி: "ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டமானது பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமற்றது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கடந்த மாதம் நிகழ்த்திய சுதந்திர தின உரையிலும் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை அமலாக்குவது குறித்து வலியுறுத்திக் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது வெளியாகிய செய்திகள் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சிக்காலத்துக்குள் நடைமுறைப்படுத்த மத்திய பாஜக கூட்டணி அரசு உறுதியாக இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி.ராஜா அளித்த பேட்டியில், "ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் ஒருபோதும் ஆதரிக்காது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் இதை தெரிவித்துள்ளோம்.
இந்தியா ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாடு. நமது நாட்டில் ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.
மக்களவை, சட்டப்பேரவை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் மற்றும் மாநில அரசுகளின் பதவிக்காலம் குறித்து அரசமைப்புச் சட்டம் தெளிவாக கூறுகிறது. இந்நிலையில், மாநில அரசுகளிடமிருந்து அனைத்து அதிகாரிகளையும் மத்திய அரசு பறித்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரம் அரசியல் நிர்ணய சபையிலும் விவாதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது' என்றார்.