
காங்கிரஸ் எம்பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எக்ஸ் பதிவு
இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பாஜக தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது தொடர்பான ஊடக செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது தான் ராகுலுக்கும் நடக்கும் என்று பாஜகவினர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதேபோல சிவசேனை (ஷிண்டே) எம்எல்ஏ ராகுலின் நாக்கை அறுத்தால் பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார். எனது சகோதரர் ராகுல் காந்திக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவு பலரையும் அமைதிப்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும். மேலும், மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிரட்டல்
முன்னதாக பாஜக தலைவர் தர்விந்தர் சிங் செப்டம்பர் 11 ஆம் தேதி இந்திரா காந்திக்கு நிகழ்ந்தது தான் ராகுலுக்கும் நடக்கும் என்று கூறியிருந்த நிலையில், சிவசேனை( ஷிண்டே) எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.