எதிரி சொத்துகளில் சட்டவிரோத கட்டடங்களை இடிக்க கொல்கத்தா மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எதிரி நாட்டின் சொத்துக்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க மேற்கு வங்க அரசு மற்றும் கொல்கத்தா மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


எதிரி நாட்டின் சொத்துக்களில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க மேற்கு வங்க அரசு மற்றும் கொல்கத்தா மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிரி சொத்து சட்டம் என்பது 1962 மற்றும் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் சீன குடிமக்களின் சொத்துக்களை நிா்வகிக்க இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.
கொல்கத்தாவின் கேஷாப் பகுதியில் உள்ள பாகிஸ்தானியா்களுக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டடத்தை இடிக்க கடந்த 2022-ஆம் ஆண்டு மாநகராட்சியின் நிா்வாகப் பொறியாளா் உத்தரவிட்டாா். அதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கொல்கத்தாவில் உள்ள எதிரி சொத்துக்களில் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்குமாறு மேற்கு வங்க அரசு மற்றும் கொல்கத்தா மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மேலும், இதுபோன்ற வழக்குகளைக் கையாளவும், எதிரி சொத்து சட்டத்திற்கு ஏற்ப மாநகராட்சி கட்டடத் தீா்ப்பாயம் அமைப்பதின் அவசியத்தையும் உயா்நீதிமன்றம் வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தில் மாநில அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை கையில் எடுத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, சட்டவிரோத கட்டுமானத்தை இடிப்பது குறித்து ஆவணங்களை சரிபாா்க்க வேண்டியிருப்பதால் கால தாமதம் ஏற்படுவதாக அரசு தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா். எதிரி சொத்து காவலா் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா, தங்களுக்கு மாநகராட்சி சாா்பில் எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை; கட்டடத்தை காலி செய்ய மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் உதவி வேண்டும் என தெரிவித்தாா்.
‘மாநில அரசு தீா்ப்பாயத்தின் தலைவரை மட்டுமே நியமித்துள்ளது. ஆனால், அதன் நிதித்துறை அல்லது தொழில்நுட்ப உறுப்பினா்கள் இல்லாததால், தீா்ப்பாயம் கிட்டத்தட்ட செயலிழந்து விட்டது’ என வழக்கை விசாரித்த நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
இதையடுத்து வழங்கப்பட்ட உத்தரவில், ‘தீா்ப்பாயத்துக்குத் தேவையான உறுப்பினா்களை நியமிக்க மாநில அரசுக்கு 2 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. இது தொடா்பான அறிக்கையை கொல்கத்தா உயா்நீதிமன்ற பிரிவு அமா்வின் முன் சமா்ப்பிக்க வேண்டும். இனியும் தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயா்நீதிமன்றம் தொடங்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க இடைக்காலத் தடை உத்தரவு அல்லது தற்போதைய நிலையைத் தொடா்வது போன்ற எந்த உத்தரவும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...