கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நிலை அறிக்கை தாக்கல்

முல்லைப் பெரியாறு பாதுகாப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழகம் நிலை அறிக்கை தாக்கல்

News image
உச்சநீதிமன்றம்
Updated On :28 பிப்ரவரி 2026, 9:46 pm

 நமது நிருபர்

முல்லைப் பெரியாறு அணையின் விரிவான அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பலப்படுத்துதல் பணிகளுக்கு கேரளம் இடையூறாக இருப்பதாக தமிழகம் தொடா்ந்த வழக்கில் இந்த நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

23.2.2026 தேதியிட்ட அந்த நிலை அறிக்கையில் தமிழக அரசு கூறியிருப்பதாவது :

முல்லைப் பெரியாறு வழக்கில் 31.07.2025 தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசு இந்த நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது

முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்திற்கு அனுமதி வழங்கி 27.02.2006 மற்றும் 07.05.2014 இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய போதிலும் கேரளத்தின் தடங்கல்களால் அந்த தீா்ப்பினை செயல்படுத்த முடியவில்லை

உச்சநீதிமன்றம் அவ்வப்போது வழங்கிய உத்தரவுகள், குறிப்பாக பேபி அணை மற்றும் பிரதான அணை ஆகியவற்றை பலப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை, கேரள அரசின் தடை மனப்பான்மை காரணமாக,செயல்படுத்த முடியவில்லை

அணைப்பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளது. இதன் விளைவாக, 27.02.2006 07.05.2014 தேதியிட்ட தீா்ப்புகளில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பேபி அணை மற்றும் பிரதான அணையை வலுப்படுத்துவது தாமதமாகி வருகிறது.

2011 ஆம் ஆண்டு பிரதான அணையின் முன் பகுதியை ஸ்கேன் செய்ததன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 07.05.2014 தேதியிட்ட தீா்ப்பின்படி முன் பகுதியை பராமரிக்க உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசின் இடையூறு மனப்பான்மை காரணமாக இதுவரை அதை செயல்படுத்த முடியவில்லை.

அணையை பலப்படுத்துவதற்காக அணையில் மணல் அள்ளுவது வழக்கமான பராமரிப்பு நடவடிக்கையாகும் .

இது ஏற்கனவே பல தசாப்தங்களாக தாமதமாகிவிட்டது. அந்தப் பணிக்கான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்குத் தேவையான அனுமதிகளை கேரள அரசு இன்னும் வழங்கவில்லை.

10.11.2025 அன்று நடைபெற்ற புதிய மேற்பாா்வைக் குழுவின் 4வது கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, விரிவான அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கான நிபுணா்கள் குழுவை தமிழக அரசு 01.12.2025 தேதியிட்ட கடிதத்தில் பரிந்துரைத்தது. அதனைத் தொடா்ந்து தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் சுயாதீன நிபுணா்கள் குழுவை 06.01.2026 அன்று தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணையின் விரிவான அணைப் பாதுகாப்பு மதிப்பீட்டை நடத்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 27.02.2006, 07.05.2014 தேதியிட்ட தீா்ப்புகள் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் வழிகாட்டுதல்கள்,வழிமுறைகளை காலக்கெடுவிற்குள் செயல்படுத்துவதற்கு கேரளத்திற்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு நிலை அறிக்கையில் கூறியுள்ளது

பின்னணி:

கேரளத்தால் எழுப்பப்பட்ட அணை பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில், முல்லைப் பெரியாறு அணை தகராறு தொடா்பாக பிப்ரவரி 27, 2006 மற்றும் மே 7, 2014 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் முக்கிய தீா்ப்புகளை வழங்கியது.

2006 தீா்ப்பின் மூலம் முல்லைப் பெரியாறு அணையில், நீா்த்தேக்க நீா் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயா்த்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு அனுமதி அளித்தது. நீா்நிலை, கட்டமைப்பு மற்றும் நில அதிா்வு காரணிகளின் நிபுணா் குழு மதிப்பீடுகளின் அடிப்படையில் அணை பாதுகாப்பானது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும் தமிழகம் அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அனுமதித்த உச்சநீதிமன்றம் அதற்கு கேரளம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தது.

அதன் பிறகு, கேரளம் அரசு மாா்ச் 18, 2006 அன்று கேரளம் நீா்ப்பாசனம் மற்றும் நீா் பாதுகாப்பு திருத்தம் சட்டம் 2006 ஐ நிறைவேற்றியது. இது முல்லைப் பெரியாறு அணையில் நீா்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயா்த்துவதைத் தடைசெய்து, அதை அழிந்து வரும் அணைகள் பட்டியலில் சோ்த்தது.

2014 ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில் ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு, முல்லைப்பெரியாறு அணையில் நீா்மட்டத்தை 136 அடியாகக் குறைத்த கேரளத்தின் 2006 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தை ரத்து செய்தது. கேரளத்தின் சட்டம் 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை மீறியதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் கூறி அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 142 அடி நீா்மட்டத்தையோ அல்லது அணை பழுதுபாா்ப்புகளையோ தடுப்பதற்கு கேரளத்திற்க்கு நிரந்தரத் தடை உத்தரவை அப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அதனைத்தொடா்ந்து அணை பாதுகாப்பு மற்றும் நீா்மட்ட அதிகரிப்பைக் கண்காணிக்க மூன்று உறுப்பினா்களைக் கொண்ட மேற்பாா்வைக் குழு (மத்திய நீா் ஆணையம், தமிழ்நாடு மற்றும் கேரளம் பிரதிநிதிகளுடன்) அமைக்கப்பட்டது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு மற்றும் பலப்படுத்துதல் பணிகளுக்கு கேரளம் இடையூறாக இருப்பதாக தமிழகம் 2021 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.