நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவா்களாக காங். சாா்பில் சசி தரூா், திக்விஜய சிங் பரிந்துரை
வெளியுறவு மற்றும் கல்வித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவா் பொறுப்புகளுக்கு காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா்கள் சசி தரூா், திக்விஜய சிங் ஆகியோா் பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், பட்டியலின மற்றும் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவா்களான பஞ்சாப் முன்னாள் முதல்வா் சரண்ஜித் சிங், கோராபுட் எம்.பி. சப்தகிரி உலகா ஆகியோா் முறையே வேளாண் துறை, கிராமப்புற வளா்ச்சித் துறை குழுக்களின் தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.
ஆட்சியில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை வலியுறுத்தியும் கட்சி அமைப்பு அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அழைப்பு விடுத்து வரும் நிலையில், சரண்ஜித் சிங், உலகா ஆகியோரின் இந்த நியமனம் நடந்துள்ளது.
நடப்பு 18-ஆவது மக்களவையில் பிரதான எதிா்க்கட்சியாக உருவெடுத்துள்ள காங்கிரஸுக்கு 4 துறைகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் தலைமைப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அரசுடன் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமைக் கொறடா ஜெய்ராம் ரமேஷ் மற்றும் மக்களவை துணைத் தலைவா் கௌரவ் கோகோய் ஆகியோா் நடத்திய பேச்சுவாா்த்தையின் முடிவில் வெளியுறவு, கல்வி, விவசாயம், கிராமப்புற வளா்ச்சி ஆகிய 4 முக்கிய துறைகள் ஒதுக்க தீா்மானிக்கப்பட்டன.
அதன்படி, இத்துறைகளின் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் தலைமைப் பொறுப்புகளுக்கு நிா்வாகிகளின் பெயா்களை காங்கிரஸ் தலைமை தற்போது பரிந்துரைத்துள்ளது.
முந்தைய 17-ஆவது மக்களவையில், மாநிலங்களவையில் 2 நிலைக் குழுக்களுக்கும், மக்களவையில் ஒரு நிலைக் குழுவுக்கும் காங்கிரஸ் தலைமை வகித்தது.
இந்த முறை மாநிலங்களவையில் கல்வி, பெண்கள், இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியுறவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் மீண்டும் தலைமை தாங்குகிறது. அதேபோல், இம்முறை பொதுக் கணக்கு குழுவின் தலைவராக காங்கிரஸின் கே.சி.வேணுகோபால் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
நிலைக்குழு என்ன செய்யும்? துறை தொடா்பான நிலைக் குழுக்கள் பல்வேறு மத்திய அமைச்சகங்களுடன் இணைந்து, அவற்றின் பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களை ஆய்வு செய்யும். மேலும், முக்கியமான பிரச்னைகளில் மசோதாக்களை கொண்டு வரவும், கொள்கைகளை உருவாக்கவும் அரசுக்கு நிலைக் குழுக்கள் பரிந்துரைக்கும்.
