திருப்பதி ஏழுமலையானுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டில் நெய்க்கு மாற்றாக விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள வெங்கடேஸ்வர கோயிலில், சுவாமிக்கு படைக்கப்படும் லட்டு, பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி லட்டு என்றாலே அது உலகப் பிரபலம்.
இந்த திருப்பதி லட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அமைந்திருக்கும் சமையலறையில் மிகவும் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பாரம்பரியமான முறையில், நெய், கற்கண்டு, அரிசி மாவு, கடலை மாவு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்டப் பொருள்களை ஒரே சீரான அளவில் கலந்து திருப்பதி லட்டு பல ஆண்டு காலமாக ஒரே சுவையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டுவின் சிறப்பம்சமே அதில் சேர்க்கப்படும் தரமான பொருள்களும் நெய்யும்தான்.
கர்நாடக அமைப்பிடமிருந்து திருப்பதி அறக்கட்டளை தற்போது ஒரு கிலோ நெய் ரூ.475 என்ற விலையில் வாங்குகிறது.
நாள்தோறும் பக்தர்களுக்கு வழங்க 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.
திருப்பதி லட்டு விற்பனையின் மூலம், ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய் கிடைக்கிறது.
திருப்பதி லட்டின் வரலாறு
திருப்பதி லட்டு தயாரிப்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறது. இது குறித்து வரலாறு கூறுவது என்னவென்றால், கடந்த 1715ஆம் ஆண்டு முதல் திருப்பதி திருமலையில் லட்டு பிரசாதகமாக வழங்கப்படுகிறது என்பதே. இப்படி கணக்கிட்டால், திருப்பதி லட்டுவின் வயது 300 ஆண்டுகள்.
புவிசார் குறியீடு
திருப்பதி லட்டு, ஜிஐ எனப்படும் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. எனவே, இந்த தயாரிப்பு முறையைப் பயன்படுத்தி வேறு யாரும் லட்டு தயாரித்து, இந்தப் பெயரில் விற்பனை செய்ய முடியாது, கூடாது. இதேப் பொருள்களைப் போட்டு லட்டு தயாரித்தாலும், இந்த ருசியுடன் வராது, அது பெருமாள் பிரசாதம் என்பதால் கூடுதல் சுவை என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையும் கூட.
சர்ச்சை என்ன?
கடந்த ஜூலை மாதம், திருப்பதி திருமலைக்கு விநியோகிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக, ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் நெய் வாங்குவது நிறுத்தப்பட்டு, கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்திடமிருந்து நெய் வாங்கும் பணி தொடங்கியது.
முன்பு, திருப்பதி தேவஸ்தானம் ஒரு கிலோ நெய்க்கு ரூ.320 என விலை கொடுத்து வந்தது. அந்த ஒப்பந்த நிறுவனங்கள் தற்போது கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்துக்கு ஒரு கிலோ நெய் ரூ.475 விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
இந்த சர்ச்சை, இப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட தகவலால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜூலை 23ஆம் தேதி லட்டு சுவையில் மாற்றம் இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், தேங்காய் எண்ணெய், பருத்திக்கொட்டை, ஆளிவிதை, பலாக்கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்கள் கூட கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆறு முறை ருசி மாற்றம்
திருப்பதி லட்டு தயாரிக்கும் முறையில் இதுவரை ஆறு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதன்முதலில், கடலைமாவிலிருந்து பூந்தி தயாரிக்கப்பட்டு, வெள்ளப் பாகில் அந்த பூந்தி போட்டு, அதிலிருந்து லட்டு தயாரிக்கப்பட்டது. இதன் மூலம், லட்டு வெகுநாள்கள் கெடாமல் இருந்தது. அதன்பிறகுதான் அதில், திராட்சை, முந்திரி சேர்க்கப்பட்டது. நாளடைவில், கூடுதல் ருசிக்காக, பாதாம் பருப்பும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.