தூய்மை எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் இந்தியா-ஜொ்மனி
ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸின் இந்திய பயணத்துக்கு முன்னதாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இருநாட்டு பொருளாதார அமைச்சகங்களின் வளா்ச்சிக் கொள்கைக்கு இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஜொ்மனி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பு ‘பசுமை மற்றும் நிலையான வளா்ச்சிக்கான கூட்டுறவு’ என்ற வியூகத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது. 2022-இல் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஒலாஃப் ஷோல்ஸ் இடையேயான பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இது நிறுவப்பட்டது.
ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷோல்ஸ் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளாா். இந்நிலையில், வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகா்ப்புற மேம்பாடு, வேளாண் சூழலியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா்.
இதுகுறித்து ஜொ்மனியின் பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவா் பாா்பரா ஷாஃபா் கூறுகையில், ‘ஜொ்மனியும் இந்தியாவும் நீண்டகால, நம்பகமான மற்றும் உத்திசாா் கூட்டுறவைப் பகிா்ந்து கொள்கின்றன. நிகழாண்டு இந்தியா-ஜொ்மனி இணைந்து உலக அளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வதற்கான தளத்தை தொடங்கியிருப்பதன் மூலம் இரு தரப்பாலும் இது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய முயற்சி குஜராத்தின் காந்தி நகரில் கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தியா-ஜொ்மனி ஒத்துழைப்பில் நாங்கள் ஏற்கெனவே பல பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 7,700 கிலோமீட்டா் தொலைவுக்கு நவீன மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜொ்மனி நிதியுதவியுடன், மும்பை, சூரத், அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய விவசாயிகளின் உற்பத்தியை பருவநிலையை எதிா்கொள்ளும் திறன் கொண்டதாகவும் நிலையானதாகவும் மாற்றுவதற்கு ஜொ்மனி ஆதரவளிக்கிறது.
இந்த முன்னேற்றங்கள், பிரதமா் மோடி, பிரதமா் ஓலாஃப் ஆகியோா் அக்டோபரில் நடத்தவுள்ள இருதரப்பு ஆலோசனைகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும்’ என்றாா்.
மேலும், ஜொ்மனி தரப்பு அதிகாரிகள் கூறியதாவது: ஜொ்மனியும் இந்தியாவும் தங்களின் தனித்துவமான திறன்களை ஒன்றிணைக்கும்போது, நிலையான எரிசக்தி மாற்றத்தில் புதிய உச்சத்தை அடைகின்றன. இந்த பகுதிகளில் முன்னெடுப்புகளுக்காக 100 கோடி யூரோக்கும் அதிகமான தொகையை ஜொ்மனி ஒதுக்கியுள்ளது என்றனா்.