
தி என்ஜினியர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஹமாஸ் தலைவரும் குண்டு தயாரிப்பில் வல்லவராக விளங்கிய யாஹ்யா அய்யாஷ், 1996ஆம் ஆண்டு ஒரே ஒரு போன் கால் மூலம் கொல்லப்பட்ட சம்பவத்தை உலகமே தற்போது நினைவுகூர்கிறது.
யாஹ்யா தயாரித்த வெடிகுண்டு மூலம் ஒரே நேரத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதற்காக பழிதீர்க்க நினைத்தது இஸ்ரேல்.
இஸ்ரேலால் அதிகம் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியான யாஹ்யாவைக் கொல்ல, ஷின் பெய்ட் என்ற உளவு அமைப்பு செல்போனை வெடிகுண்டாக மாற்றியது.
லெபனானில் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் காலத்திலிருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதுதான் மிக விசேஷம். இதனால்தான் தொழில்நுட்பத்தாக்குதலின் பிதாமகன் இஸ்ரேல் எனப்படுகிறது.
ஹமாஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த யாஹ்யா அய்யாஷைக் கொன்ற மொபைல் வெடிகுண்டு தாக்குதல் மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டது. இது அப்போதைய காலத்தில் வெகுவாகப் பேசவும்பட்டது.
அதாவது, கொல்லப்பட்ட யாஹ்யாவின் முகத்தின் வலது பக்கத்தை மட்டுமே அந்த வெடிகுண்டு தாக்கியது. ஆனால், போனை வைத்திருந்த வலது கைக்கு எந்த சேதாரமும் ஆகவில்லை. பிறகு, அந்த வலது கை ஒரு சின்னமாகவே மாறியது, அதன் மாதிரிகள், ஜனவரி 1996 இல் காஸா நகரில் அவரது இறுதிச் சடங்கில்கூட நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்போது அதிகம் பிரபலமாக இருந்தது இந்த தொலைபேசி எண்தான், 050507497 என்ற எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதை எடுத்த அப்தெல் லத்தீஃப் காதில் கேட்ட வார்த்தைகள், தந்தையே எப்படி இருக்கிறீர்கள்? உடனே அந்த மொபைல் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. அதிர்ச்சியடைந்த தந்தையோ அதே எண்ணுக்கு மீண்டும் அழைக்கிறார். ஆனால் இம்முறை, ரிங் போகவில்லை, அதற்கு மாறாக, தானியங்கி குரல் ஒலிக்கிறது, அது சொல்கிறது, இந்த எண் தொடர்பில் இல்லை என்று. இந்த சம்பவம் நடந்தது 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்த கடைசி வார்த்தையைச் சொன்னது ஹமாஸ் வெடிகுண்டு தயாரிப்பாளர், வெல்லமுடியாதவர் என்ற அடையாளத்தோடு இருந்த யாஹ்யா அய்யாஹ்.
வெல்ல முடியாதவர் என பெயர் கிடைத்தது என்னவோ, சினிமா நடிகர்களுக்கு சூட்டப்பட்ட பட்டம் போல அவரது ரசிகர்கள் சூட்டியது அல்லவாம், புலனாய்வுத் துறையினரை ஏமாற்றுதல், சிக்கினாலும் மாறுவேடமிட்டு தப்பித்தல், மற்றும் மறைந்துப் போவதில் வல்லவரான அய்யாஷ், தனது குண்டுகள் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத அப்பாவி மக்கள் மீது மரணமழை பொழிந்தாலும், இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களை விட எப்போதும் எல்லாவற்றிலும் முன்னிலையில் இருந்தார்.
பொறியாளர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த 29 வயதே ஆன யாஹ்யா தயாரித்த குண்டுகள் மூலம் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் நடத்திய செல்போன் குண்டுவெடிப்பு மூலம் ஒரே ஒருவர் தான் கொல்லப்பட்டார். அவர் யாஹ்யா. இந்த தாக்குதல் நடந்த போது, அவருக்கு மிக அருகே நின்றுகொண்டிருந்தவர்கூட சிறு காயமின்றி உயிர் தப்பினார். இதுதான் தாக்குதலின் ஹைலைட்.
உண்மையில் சொல்லப்போனால் 1996ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு செல்போன் என்றால் என்னவென்றே தெரிந்திருக்காது, தெரிந்திருந்தாலும் பார்த்திருக்கவோ, தொட்டுப்பார்த்திருக்கவோ முடிந்திருக்காது.
இஸ்ரேலில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப் படைத் தாக்குதலில், யாஹ்யாவின் வெடிகுண்டு அவரது பெயரை தீப்பிழம்பாகக் கொட்டச் செய்திருந்தது. இந்த தாக்குதல்களினால் புகழ்பெற்று, காஸாவில், இப்போதும் இந்த இன்ஜினியரை மக்கள் தெய்வமாக வழிபாடு செய்கிறார்கள் என்றால் பாருங்களேன். அவர் கொல்லப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது பெயரில் தெருக்கள் உள்ளன.
சும்மா நடக்கவில்லை இன்ஜினியரின் படுகொலை. 1995ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின் படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மிகத் துல்லியமாக சதி திட்டம் தீட்டப்பட்டு, யாஹ்யா அய்யாஷ் மீதான செல்போன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் ராபினின் படுகொலையால், இஸ்ரேலின் உளவுப் பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் மீதான அதிருப்தி அதிகரித்தது. இதனால், ஷின் பெட் தனது கோர முகத்தைக் காட்ட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. பதில் தாக்குதல், மிகத் துல்லியமாக இருந்ததால் ஷின் பெட்டை மகுடத்தில் ஏற்றிவைத்தது.
யாஹ்யாவை படுகொலை செய்வது என்பது வெறும் தாக்குதலாக மட்டுமல்லாமல், நாட்டின் வெற்றியாகவும் பார்க்கப்பட்டது, உலகிலேயே நடத்தப்பட்ட முதல் செல்போன் வெடிகுண்டு தாக்குதல் என்றும் மிகவும் விலைமதிப்பற்ற சம்பவமாகவும் மாற்றியிருந்தது இஸ்ரேல்.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துவிட்ட நிலையில், இஸ்ரேலின் மொஸாத் என்ற புலனாய்வு அமைப்பு, லெபனானில் அந்த கற்கால தொழில்நுட்பமான பேஜர் மற்றும் வாக்கிடாக்கிகளைக் கொண்டே தாக்குதல் நடத்தி, இஸ்ரேல், தொழில்நுட்பத் தாக்குதலின் பிதாமகன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எப்படிக் கொல்லப்பட்டார் யாஹ்யா.. அவரது கையில் வெடிகுண்டு வைத்த செல்போன் கொடுக்கப்பட்டது எப்படி? யாஹ்யா என்பவர் யார்.. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையாக.. 1996 சம்பவம்.. இஸ்ரேலுக்கு 'தண்ணி காட்டிய' என்ஜினியர்! செல்ஃபோனில் 50 கிராம் ஆர்டிஎக்ஸ்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.