இனி உங்கள் வீட்டிலும் பாக்கெட்டிலும்கூட குண்டு வெடிக்கலாம்! அதிபயங்கர போரின் அடுத்த உத்தி!
லெபனானில் பேஜர்களையும் வாக்கி டாக்கிகளையும் வெடிக்கச் செய்து இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் உத்தியின் காரணமாக, எதிர்காலத்தில் எங்கே வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தாக்கி அழிக்கலாம்; அழிக்க முடியும்!
லெபனானிலும் சிரியாவின் சில இடங்களிலும் சில நாள்களுக்கு முன், செப். 17 -கடந்த செவ்வாய்க்கிழமை ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் வசமிருந்த ஆயிரக்கணக்கான பேஜர்கள் திடீரென சொல்லிவைத்தாற்போல ஒரேநேரத்தில் வெடித்துச் சிதறின – பலி 12, காயம் 2,800!
மறுநாள், செப். 18, இதே ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் வைத்திருந்த வாக்கி டாக்கிகளும் ஒரேநேரத்தில் வெடித்துச் சிதறின – பலி 25, காயம் சுமார் 450!
உலகில் இதுவரையில் இதுபோன்ற, இந்த பாணியிலான தாக்குதல்கள் நடைபெற்றதில்லை. இஸ்ரேலின் ரகசிய உளவுப் படையான மொசாத் இதுபோன்ற புதிய உத்தியிலான தாக்குதல்களை நடத்துவதில் திறமை மிக்கது; இதற்கு எடுத்துக்காட்டான சம்பவங்கள் இருக்கின்றன.
ஆனால், இதுவரையிலும் இப்போதைய தாக்குதல்களைத் தாங்கள் நடத்தியதாக இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவுமில்லை; மறுக்கவும் இல்லை; நூறு சதவிகிதமும் இஸ்ரேல்தான் காரணம் எனக் கூறப்பட்டாலும்.
ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் தன்னுடைய உறுப்பினர்களுக்காக ஆர்டர் செய்திருந்த சுமார் 5 ஆயிரம் பேஜர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இதே காலகட்டத்தில்தான் இவர்களுக்காக வாக்கி டாக்கிகளுக்கும் ஆர்டர்கள் தரப்பட்டு வாங்கப்பட்டிருக்கின்றன.
பரவலான இந்த குண்டு வெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. லெபனானில் சப்ளை செய்யப்படுவதற்கு முன்னரே இந்த பேஜர், வாக்கி டாக்கிகளில் யாரோ ‘கைவைத்திருக்க வேண்டும்’ எனக் கருதப்படுகிறது. சங்கேத குறிப்புகள் அல்லது ரேடியோ சமிக்ஞைகள் மூலம் வெடிக்கச் செய்யும் வகையில் சிறு அளவிலான வெடிபொருள்களை இந்த மின்னணு சாதனங்களில் பொதிந்து வைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஒருவேளை இதுவே உண்மையென்றால், மின்னணு சாதனங்களின் வழி உலகில் எங்கே வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் ஊடுருவலாம், தாக்குதல்களை நடத்தலாம் என்றாகிறது. இத்தகைய தாக்குதல்களை மொசாத் தொடக்கி வைத்துள்ளதாகக் கருதப்படும் நிலையில், இதேபாணியை பிற தீவிரவாத குழுக்களும் பின்பற்றினால்...
பேஜர்கள் எங்கிருந்து வந்தன?
தாய்வானைச் சேர்ந்த கோல்டு அப்போலோ என்ற நிறுவனத்திடம்தான் இந்த பேஜர்களுக்கான ஆர்டர்களை ஹெஸ்புல்லா வழங்கியிருந்ததாக லெபனான் பாதுகாப்பு அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், இந்தத் தாய்வான் நிறுவனமோ, இந்த பேஜர்கள் (ஏஆர்-924 மாடல்) யாவும் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டிலுள்ள பிஏசி என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை; சில குறிப்பிட்ட பிராந்தியங்களில் வடிவமைத்து கோல்டு அப்போலோ பெயரைப் பயன்படுத்தித் தயாரிக்கவும் விற்கவும் இவர்கள் தங்களிடம் உரிமம் பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த வெடிப்புகளைத் தொடர்ந்து, தன்னுடைய வணிக மதிப்பைக் குலைத்துவிட்டதாக பிஏசி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க கோல்டு அப்போலோ திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த பிஏசி நிறுவனமே அனேகமாக மொசாத்தால் உருவாக்கப்பட்ட முகமூடி நிறுவனமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேஜர்கள் விற்பனை தொடர்பாக, பல்கேரியாவைச் சேர்ந்த நோர்டா குளோபல் லிமிடெட் என்ற இன்னொரு நிறுவனமும் விசாரணை வளையத்துக்குள் இருக்கிறது.
வாக்கி டாக்கிகள் வந்த வழி!
தவிர, குண்டுகளாக மாறி வெடித்த வாக்கி டாக்கிகளைப் பொருத்தவரை இவற்றில் இப்போதும் சந்தையில் இருக்கும் ஜப்பானிய ரேடியோ நிறுவனமான ஐசிஓஎம்மின் இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், தற்போது ஹெஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்ட ஐசி – வி82 மாடல் வாக்கி டாக்கிகளைக் கடந்த பத்தாண்டுகளாக இந்த நிறுவனம் தயாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த பழைய மாடல் வாக்கி டாக்கிகள் இன்னமும் இணையவெளியில் விற்பனைக்குக் கிடைக்கிறது; மட்டுமின்றி, இவற்றின் போலிகளும் வெளிச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பேஜர்களும் வாக்கி டாக்கிகளும் ஏன்?
ஏறத்தாழ இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பம் சார்ந்த - புழக்கத்திலிருந்த இந்த பேஜர்களையும் வாக்கி டாக்கிகளையும் யாராவது இந்த நவீன காலத்தில் பயன்படுத்துவார்களா? பிறகு எதற்காக ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் மட்டும் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்?
இதற்கும் நல்ல காரணம் இருக்கிறது. ஹெஸ்புல்லா தீவிரவாதிகளும் எல்லாரையும் போல ‘நவீன யுகத்தின் நன்கொடை(?)’யான செல்போன்களைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், இந்த செல்போன் சிக்னல்கள் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை இஸ்ரேலால் எளிதில் கண்காணிக்க முடியும் என சந்தேகப்பட்டதால் ஒட்டுமொத்தமாக செல்போன்களைத் தலையைச் சுற்றி வீசிவிட்டு பேஜர்களுக்கும் வாக்கி டாக்கிகளுக்கும் இவர்கள் மாறியிருக்கின்றனர்.
இதுபற்றித் தீவிரவாதிகளை ஹெஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பின்வருமாறு எச்சரித்தாராம்:
‘இஸ்ரேலிய உளவாளிகளை விடவும் உங்கள் செல்போன்கள் ஆபத்தானவை, அவற்றை உடைத்துப் போடுங்கள், புதைத்துவிடுங்கள் அல்லது இரும்புப் பெட்டகங்களில் வைத்துப் பூட்டிவிடுங்கள்’. எனவேதான், ஹெஸ்புல்லா சம்பந்தப்பட்ட அனைவரும் கடந்த காலத்துக்குத் திரும்பி பேஜர்களையும் வாக்கி டாக்கிகளையும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
ஏற்கெனவே, சர்வமும் கணினிமயத்தால் உலகம் முழுவதுமே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. யாருடைய இணைய தளத்திற்குள்ளும் - திறமை இருந்தால் – யார் வேண்டுமானாலும் புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றாகிவிட்டிருக்கிறது.
இன்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் யூ டியூப் சேனலையே யாரோ ‘லவட்டிக் கொண்டு போய்’, கிரிப்டோ கரன்சி விளம்பரம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாகிவிட்ட நிலையில் உலகில் எங்கெங்கோ தயாரிக்கப்பட்ட பொருள்கள் எங்கெங்கோ விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆக, எப்போதோ, எங்கோ தயாரிக்கப்படும் மின்னணு சாதனங்களில் ரகசியமாக – தேவைப்பட்டால், தேவைப்பட்ட நேரங்களில் வெடிக்கச் செய்யக் கூடிய வெடிபொருள்களை யார் வேண்டுமானாலும் பொதிந்து வைத்துப் பரப்பியிருக்க முடியும், கண்ணிவெடிகள் மாதிரி!
லெபனானுக்காக இன்று பேஜர்களிலும் வாக்கி டாக்கிகளிலும் பொதிந்துவைத்த வெடிமருந்தை செல்போன்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளில், லேப்டாப்களில், இயர்போன்களில்... என எங்கே வேண்டுமானாலும் மறைத்து வைக்க முடியும்; சில ஆண்டுகள் கழித்துத் தேவைப்படுகிற நேரத்தில் வெடிக்கச் செய்ய முடியும்.
உலகம் முழுக்கப் பறக்கிற விமானங்களில் எல்லாமும் லட்சக்கணக்கான செல்போன்களும் மின்னணு சாதனங்களும் சேர்ந்துதான் பறந்துகொண்டிருக்கின்றன.
லெபனானில் ஹெஸ்புல்லாக்களுக்கு, காஸா ஹமாஸ் தீவிரவாதிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் அல்லது அச்சுறுத்த வேண்டும் என்று நினைத்துப் பல மாதங்களாகத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை மொசாத் நடத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதே பாணியை உலகிலுள்ள எந்தவொரு தீவிரவாத அமைப்பும் எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்த முடியும். இதையே நாடுகளுக்கு எதிராகத் திட்டமிட்டு எதிரி நாடுகளும் பயன்படுத்த முடியும்.
ஆக, லெபனான்வழியே எதிர்காலப் போர்களின் அடுத்த கட்டத்துக்கான உத்தி அறியப்பட்டு அல்லது அனைவருக்குமாக அம்பலப்பட்டுவிட்டதெனக் கொள்ளலாம். கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.