நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்
நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர்

நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ. பள்ளம்: கண்டுபிடித்த பிரக்யான் ரோவர்!

நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., பரப்பளவில் புதிய பள்ளத்தை சந்திரயானின் பிரக்யான் ரோவர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
Published on

நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., பரப்பளவில் புதிய பள்ளத்தை சந்திரயானின் பிரக்யான் ரோவர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சந்திரயான் - 3 செயற்கைக் கோள் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதில், பிரக்யான் ரோவர் விண்கலத்திலிருந்து புதிதாக வந்த செய்தியின் மூலம் நிலவின் தென் துருவத்தில் பழங்கால பள்ளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளம் 160 கி.மீ., பரப்பளவில் இருப்பதாகவும், பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு அருகில் இது இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அகமதாபாத்தில் உள்ள ஆய்வகத்தின் விஞ்ஞானிகளால் சயின்ஸ் டைரக்ட் பத்திரிகையின் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பழமையான பள்ளத்தாக்கான எய்ட்கென் பேசின் பகுதியிலிருந்து 350 கி.மீ., தொலைவில், உயரமான நிலப்பரப்புகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிரக்யான் ரோவர், அது தரையிறங்கிய பகுதிக்கு அருகில் இந்தப் புதிய பள்ளத்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்தப் பள்ளம் எய்ட்கென் பேசின் பள்ளத்தாக்கு உருவாவதற்கு முன்னரே உருவானதாகவும், இது நிலவின் மிகப் பழமையான புவியியல் அமைப்பாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பிரக்யான் ரோவர் எடுத்தப் புகைப்படங்களின் மூலம் பள்ளத்தாக்கின் அமைப்பு தெளிவாகத் தெரிவதாகவும், இது நிலவின் புவியியல் வரலாறு குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.

தென் துருவத்தில் உள்ள எய்ட்கென் பேசின் பகுதியில் 1400 மீட்டர் அளவிலான பாறைகளின் சிதைவுகளும் நூற்றுக்கணக்கான பள்ளங்களும் இருக்கின்றது. நிலவைச் சூழ்ந்துள்ள இத்தகைய சிதைவுகள், தூசி படர்ந்த பகுதிகள் மற்றும் பாறைகள் மூலமாக நிலவின் பரிணாமம் குறித்த புரிதல்கள் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com