திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கும், க்ஷமா பிரார்த்தனைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி பல பக்தர்களுக்கு எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் நாடு முழுவதும் பேசுபொருளாகியிருந்தது.
இந்த நிலையில், கோயிலை சுத்தப்படுத்தி, ஆகம விதிப்படி திருப்பதி கோயிலின் சமையலறையை புனிதப்படுத்தும் மகா சாந்தி யாகம் இன்று காலை நடத்தி முடிக்கப்பட்டு, கோயில் சமையலறை புனிதப்படுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் அறிவித்து பூஜை தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தது.
மேலும், விலங்கு கொழுப்பு கலந்த லட்டை சுவாமிக்குப் படைத்து வழிபாடு செய்து, அதனை தானும் உண்டதால் ஏற்பட்ட தோஷத்திலிருந்து விடுபட, பக்தர்களுக்கு, திருப்பதி தேவஸ்தானம் ஒது உபாயத்தைச் சொல்லியிருக்கிறது.
அதன்படி, ஸ்ரீவாரி பக்தர்கள், இன்று மாலை 6 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி ஆரத்தி காட்டி, க்ஷமா பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது.
இந்த க்ஷமா பிரார்த்தனையானது வழிபாட்டின்போது ஏற்பட்ட பிழைகளைப் பொறுத்தருள வேண்டி செய்யப்படும் பூஜையாகும். பிரார்த்தனை அல்லது குறிப்பிட்ட பூஜைகள் செய்யும்போது, அறிந்தும் அறியாமலும் மந்திரத்தைப் பிழையாக வாசிப்பது, பூஜையை முறைப்படி தொடங்கி, முடிப்பதில் குறைவைப்பது போன்றவற்றை இறைவன் பொருத்தருள வேண்டும் என்று கோரி செய்வதாகும்.
ஆவாஹனம் ந ஜானமி.. என இந்த மந்திரம் தொடங்குகிறது. அதன் பொருள், கர்மாவுடன் தொடர்புடைய சடங்குகள் மற்றும் இதர முறைகள் எனக்குத் தெரியாது, உன்னை எப்படி வணங்குவது என்று கூட எனக்குத் தெரியாது. உன்னிடம் முறையான கோரிக்கை வைக்கவும்கூட எனக்குத் தெரியாது, அதற்காக என்னை மன்னித்துவிடு இறைவா, நான் உன்னை மட்டுமே மனதார வணங்குகிறேன் என்று குறிப்பிடுவதாகும்.
அது மட்டுமல்லாமல், வீட்டில் எளிமையாக க்ஷமா பூஜை செய்யவும், திருப்பதி ஏழுமலையானுக்கான மந்திரத்தையும் திருப்பதி தேவஸ்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.