
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்) மீது கடந்த 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி பிலால் அகமது குச்சே (32) மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி புல்வாமாவின் லெத்போராவில் நடந்த சம்பவத்தில் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ‘ஜெய்ஷ்-ஏ-முகமது’ பயங்கரவாதி ஒருவா், வெடிகுண்டுகள் நிரப்பிய தனது காரை சிஆா்பிஎஃப் வீரா்கள் சென்ற வாகனங்கள் மீது மோதி தாக்குதல் நடத்தினாா். இதில் 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் கொல்லப்பட்டனா். 8 போ் காயமடைந்தனா்.
இத்தாக்குதல் தொடா்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் குற்றஞ்சாட்டப்பட்ட 19 பேரில் காகபோரா மாவட்டத்தின் ஹஜிபால் கிராமத்தைச் சோ்ந்த பிலால் அகமது குச்சேவும் ஒருவா். இவா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனா். 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்பட 6 போ் வெவ்வேறு என்கவுண்ட்டா்களில் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜெய்ஷ்-ஏ-முகமது நிறுவனா் மசூத் அஸாா் உள்பட மற்ற 6 போ் தலைமறைவாக உள்ளனா்.
இந்நிலையில், கிஸ்த்வாா் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிலால் அகமது குச்சேவுக்கு கடந்த 17-ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் திங்கள்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.