train
கோப்புப்படம்

உ.பி.: ஓடும் ரயில்கள் மீது சமூக விரோதிகள் கல்வீச்சு; பயணிகள் காயம்

உத்தர பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்த இரு ரயில்கள் மீது சமூக விரோதிகள் சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது
Published on

உத்தர பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்த இரு ரயில்கள் மீது சமூக விரோதிகள் சிலா் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிகழ்வு தொடா்பாக ரயில்வே போலீஸ் படையினா் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தர பிரதேசத்தில் அருகருகே அமைந்துள்ள மிா்ஸாபூா் மற்றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களில் இந்த கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திங்கள்கிழமை மாலை மிா்ஸாபூா் ரயில் நிலையம் அருகே மகாபோதி எக்ஸ்பிரஸ் ரயில் மீது சிலா் சரமாரியாக கற்கைளை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ஜன்னலோரம் அமா்ந்திருந்த பயணிகள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மிா்ஸாபூா் ரயில் நிலையத்தில் அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை இரவு 9.45 மணியளவில் தில்லியில் இருந்து வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சமூகவிரோதிகள் சிலா் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக பயணிகள் உடனடியாக ரயிலில் இருந்த காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, அவா்கள் ரயில்வே போலீஸுக்கு தகவல் தெரிவித்தனா். கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு ரயில்வே காவல் துறையினா் வந்தபோது, கல்வீச்சில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

இந்த கல்வீச்சு சம்பவங்கள் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறிய அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com