
அரசு விடுதியில் தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 2 மாணவர்கள்மீது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் சர்தார்பூர் பகுதியில் அரசு நடத்தி வரும் விடுதியில் தங்கி படித்து வந்த பழங்குடியினத்தவரான 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர், புதன்கிழமையில் விடுதியின் தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மோட்டாரைப் பயன்படுத்தி, நீரை வெளியேற்ற முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து, இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதிலும், இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விடுதியை முற்றுகையிட்ட உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர், போராட்டம் நடத்தினர். மாணவர்களை யார் நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னார்கள்? என்று கேள்வியெழுப்பினர்.
இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸைச் சேர்ந்த சர்தார்பூர் எம்எல்ஏ பிரதாப் கிரெவாலுக்கும், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிங் பூரியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மாணவர்களின் உயிரிழப்பை வைத்து, காங்கிரஸ் எம்எல்ஏ அரசியல் விளையாட்டு விளையாடுவதாக சிங் பூரியா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, துணைப்பிரிவு நீதிபதி ``இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மாணவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில், அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.