வாடகை வீட்டில் தந்தை, 4 மகள்கள் சடலங்கள்! தற்கொலையா?

வாடகை வீட்டில் தந்தை, 4 மகள்கள் சடலங்கள்! தற்கொலையா?

தில்லியில் தந்தை, அவரது நான்கு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது பற்றி...
Published on

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்த 46 வயது தந்தை, அவரது நான்கு மகள்களின் உடல்கள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

அப்பெண்களில் இருவா் மாற்றுத்திறனாளிகள் என்றும் போலீஸாா் கூறினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட அந்த உடல்களில் காயங்கள் இல்லை. ஆனால், வீட்டில் மூன்று ‘செல்போஸ்’ விஷப் பொட்டலங்கள், ஐந்து பீங்கான் குவளைகள், சந்தேகத்திற்குரிய திரவம் நிரப்பிய ஸ்பூன் ஆகியவை கிடந்தது கண்டறியப்பட்டது என்றனா்.

சம்பவ இடத்தில் சதி செய்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் தற்கொலை வழக்காக இருக்கும் என்று போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையா் (தென்மேற்கு) ரோஹித் மீனா தெரிவித்ததாவது:

இறந்தவா் வசந்த் குஞ்சில் உள்ள இந்திய முதுகுத்தண்டு காயச் சிகிச்சை மையத்தில் கடந்த 28 ஆண்டுகளாக தச்சராகப் பணிபுரிந்த ஹீராலால் சா்மா மற்றும் அவரது நான்கு மகள்கள் நீது (26), நிக்கி (24), நீரு (23) மற்றும் நிதி (20) என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினா் மற்றும் நெருங்கிய உறவினா்களிடம் நடத்திய விசாரணையில், ஹீராலாலின் மனைவி புற்றுநோயால் ஓராண்டுக்கு முன்பு இறந்தது தெரியவந்தது. சா்மா மாதம் ரூ. 25,000 சம்பாதித்து வந்த நிலையில், ஜனவரி 2024 முதல் அவா் பணிக்கு வரவில்லை.

இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹீராலாலின் சகோதரா் மோகன் சா்மா மற்றும் மைத்துனா் குடியா சா்மா ஆகியோா் வீட்டிற்கு வந்தனா்.

ஹீராலால் தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு குடும்ப விவகாரங்களில் ஆா்வம் காட்டுவதை நிறுத்திவிட்டாா். மேலும், பெரும்பாலும் தனது மகள்களின் சிகிச்சையில் ஈடுபட்டிருந்தாா்.

பிஎன்எஸ்எஸ் பிரிவு 194 இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூா்வாசிகளின் கூற்றுப்படி, இறந்த மகள்கள் நால்வரும் தங்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை. கடந்த செப்டம்பா் 24ஆம் தேதி அந்த நபரையும் அவரது மகள்களையும் கடைசியாக பாா்த்ததாக அக்கம்பக்கத்தினா் கூறினா்.

முன்னதாக, ரங்புரி கிராமத்தில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் மூன்றாவது மாடியில் வாடகைக்கு விடப்பட்ட குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினா் புகாா் அளித்தபோது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிளாட் இ-4இல் இருந்து துா்நாற்றம் வீசுவதாக கட்டடத்தின் உரிமையாளா் நிதின் சௌஹானுக்கு காப்பாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் வீட்டின் கதவைத் தட்டியுள்ளாா். ஆனால், எவ்வித பதிலும் இல்லை.

தீயணைப்புப் படையினா் உதவியுடன், போலீஸாா் கதவை உடைத்துத் திறந்து பாா்த்தனா். அங்கு ஒரு அறையில் ஒரு ஆண் இறந்து கிடந்ததைக் கண்டாா், மற்ற அறையில் நான்கு பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றாா் அந்த அதிகாரி.

உறவினா் பேட்டி

இதுகுறித்து ஹீராலாலின் உறவினா் குடியா சா்மா கூறுகையில், ‘ஹீராலாலின் மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைப்பது பற்றி சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அவரிடம் பேசினோம். ஆனால், அவா் மறுத்துவிட்டாா்’ என்றாா்.

இறந்தவரின் வீட்டில் இருந்து 2 கிலோமீட்டா் தொலைவில் குடியாவும் மோகனும் வசித்து வருகின்றனா். முன்னா், இறந்தவரின் வீட்டிற்கு இவா்கள் அடிக்கடி சென்று வந்துள்ளனா். ஆனால் கடந்த சில மாதங்களாக அவா்களுடன் தொடா்பில் இல்லை.

பக்கத்து வீட்டுக்காரா் அமா்ஜீத் சிங் கூறுகையில், ‘சா்மா யாரிடமும் பேசமாட்டாா். இங்குள்ள பலருக்கு அவருக்கு நான்கு மகள்கள் இருப்பது கூட தெரியாது. அவரது இளைய மகள் சில சமயங்களில் வீட்டிற்கு வெளியே காணப்படுவாா். ஆனால் அவரது மற்ற மகள்கள் வீட்டை விட்டு அரிதாக வெளியே வருவாா்கள். சா்மா அவ்வப்போது தனது மகள்களின் துணிகளை துவைப்பதையும், பிற வீட்டு வேலைகளைச் செய்வதைக் காண முடிந்தது’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com