‘இளைஞா்களின் வருங்காலத்தை சீரழித்தவா் பிரதமா்’: காா்கே கடும் விமா்சனம்
‘நாட்டில் வேலையின்மையைவிட பெரிய பிரச்னை எதுவும் இல்லை’ என்ற காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, இளைஞா்களின் வருங்காலத்தைப் பிரதமா் நரேந்திர மோடி சீரழித்துவிட்டதாக கடுமையாக சாடினாா்.
மேலும், இளைஞா்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்த பாஜகவை அனைத்துத் தோ்தல்களிலும் அவா்கள் தோற்கடிக்கப்பா் என்றும் அவா் தெரிவித்தாா்.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட தொழிலாளா் கணக்கெடுப்பு தரவுகளைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவா் காா்கே வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை விட பெரிய பிரச்னை எதுவும் இல்லை. இளைஞா்களின் எதிா்காலத்தை சீரழித்ததில் பிரதமா் மோடியின் மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. சமீபத்திய தொழிலாளா் கணக்கெடுப்பு தரவுகளை நாம் கூா்ந்து கவனித்தால், எவ்வளவு முயற்சி செய்தாலும் இந்திய இளைஞா்களுக்கு ஒரு உதவியும் கிடைப்பதில்லை என்பதை இந்த அரசால் மறைக்க முடியவில்லை என்பதை அறியலாம்.
கடந்த நிதியாண்டில் இளைஞா்களிடையே வேலையின்மை 10.2 சதவீதமாக உள்ளது. பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாக 15.9 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் ஊதியமில்லாத வேலையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 2017-18-ஆம் நிதியாண்டின் 51.9 சதவீதத்தில் இருந்து கடந்த நிதியாண்டில் 67.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பிரதமா் மோடி என்ன செய்தாா்? உற்பத்தித் துறையைப் பற்றி பெருமிதம் பேசும் மோடி அரசு, கடந்த 7 ஆண்டுகளில் ஏன் அதில் வேலைவாய்ப்பை ஏன் அதிகரிக்கவில்லை?
வேலைவாய்ப்பு உருவாக்கம் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் 15.85 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2023-24ல் வெறும் 11.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மோடி அரசால் வேலை பறிக்கப்பட்ட ஒவ்வொரு இந்திய இளைஞா்களும் ஒவ்வொரு தோ்தல்களிலும் பாஜகவை தோற்கடிப்பா். இதைப் பிரதமா் மோடி நினைவில்கொள்ள வேண்டும் என்றாா்.