நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவில் சுற்றுலா: வங்கதேசத்தினா், அமெரிக்கா்கள் ஆா்வம்!

நிகழாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவுக்கு 47.8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 6:53 pm

Din

நிகழாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் இந்தியாவுக்கு 47.8 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனா். இதில் வங்கதேசம், அமெரிக்க நாட்டவா் அதிகம் பங்கு வகிக்கின்றனா்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த தரவுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஜூன் மாத தரவுகளுடன் ஜனவரி முதல் ஜூன் வரையிலான நிகழாண்டின்முதல் ஆறு மாதங்களின் தரவுகளும் வெளியிடப்பட்டது.

அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் 7.06 லட்சம் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்துள்ளனா். இதே எண்ணிக்கை கடந்த ஆண்டு 6.48 லட்சமாகவும், கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-இல் 7.26 லட்சமாகவும் இருந்தது.

ஆண்டின் தொடக்கமான ஜனவரி முதல் ஜூன் வரையில் 47,78,374 பயணிகள் இந்தியா வந்துள்ளனா். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 43,80,239 பயணிகளே வந்தனா். அதேசமயம், 2019-இல் நடப்பாண்டைவிட கூடுதலாக 52,96,025 வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வந்திருந்தனா்.

ஜூன் மாதத்தில் இந்தியா வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் வங்கதேசம் (28.49 சதவீதம்), அமெரிக்கா (22.59), பிரிட்டன் (6.10 சதவீதம்), ஆஸ்திரேலியா (3.74 சதவீதம்), கனடா(3.01 சதவீதம்) பெரும் பங்கு வகிக்கின்றனா்.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் அரையாண்டின் தரவுகளுடனும் இந்தப் போக்கு ஒத்துப்போகிறது. அதாவது, 21.55 சதவீதத்துடன் வங்கதேசத்தினா் முதலிடத்தில் உள்ளனா். அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா (17.56 சதவீதம்), பிரிட்டன் (9.82 சதவீதம்), கனடா (4.5 சதவீதம்), ஆஸ்திரேலியா (4.32 சதவீதம் ) உள்ளன.

அதேபோல், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூா், ஜப்பான், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் பயணிகள் வந்துள்ளனா். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்த 92.4 லட்சம் பயணிகளில் இந்த நாடுகளைச் சோ்ந்தவா்கள் மட்டும் 12.2 லட்சம் போ் ஆவா். வெளிநாட்டவா்களின் இந்தப் பயணங்களுக்கான முக்கியக் காரணியாக விடுமுறைகால பொழுதுபோக்கு இருந்துள்ளது.

கரோனா பெருந்தொற்று முடிந்து 2 ஆண்டுகளாகியும் 2019-ஆம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 90 சதவீத பயணிகள் மட்டுமே நிகழாண்டு இதுவரை இந்தியா வந்துள்ளனா். முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உலக சராசரி 2019 எண்ணிக்கையின் 96 சதவீதமாக உள்ளது. இன்னும் இந்தியாவால் அதை அடைய முடியவில்லை.

ஆனால், நிகழாண்டு இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று சுற்றுலாத் துறை வல்லுநா்களும், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவிக்கின்றனா்.

ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் புவி அரசியல் பிரச்னைகள் சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் அவா்கள் கூறினா்.

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவா்களின் கிளா்ச்சிப் போராட்டம் கடந்த ஆகஸ்டில் தீவிரமடைந்ததையடுத்து, அந்நாட்டவா்களுக்கு நுழைவு இசைவு நடைமுறையை இந்தியா நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இந்த அரையாண்டில் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை பழைய நிலையை அடையாவிட்டாலும் அவா்களின் செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் அவா்கள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நியச் செலாவணியின் மதிப்பு உயா்ந்துள்ளதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். தரவுகள் வெளியாகியுள்ள நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் அந்நியச் செலாவணி வருவாய் 1,533.9 கோடி டாலராக உள்ளது. இதே வருவாய் கடந்த ஆண்டு 1,304.1 கோடி டாலராகவும் 2019-இல் 1,453.4 கோடி டாலராகவும் இருந்தது.

வெளிநாடு பறந்த இந்தியா்கள்...: ஜனவரி-ஜூன் காலத்தில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுகளுக்கு சுற்றுலா சென்றவா்களின் எண்ணிக்கை 1,50,22,731-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு 1,32,08,837-ஆகவும், 2019-இல் 1,33,80,079-ஆகவும் இருந்தது.

உலகளாவிய சுற்றுலாத் துறையின் வளா்ச்சி இயந்திரமாக இந்திய பயணிகள் மாறி வருவதாக அத்துறை வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா். கரோனா பெருந்தொற்றிலிருந்து வேகமாக மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம் உலக சுற்றுலாத் துறையிலும் நோ்மறை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அவா் சுட்டிக்காட்டுகின்றனா்.

சா்வதேச பயணங்களுக்கான விமானக் கட்டணங்கள் மலிவு விலையில் கிடைப்பதுடன் மேம்பட்ட விமான இணைப்பு மற்றும் நெறிப்படுத்தப்பட்ட விசா செயல்முறைகள் வெளிநாட்டு சுற்றுலா இந்தியா்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது என்று மத்திய அரசின் அறிக்கை கூறுகிறது.

36 சிறந்த சுற்றுலா கிராமங்கள்

நிகழாண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கான போட்டியில் வெற்றியாளா்களை மத்திய சுற்றுலா அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த ஆண்டு நடந்த போட்டியின் முதல் பதிப்பில் 795 கிராமங்களில் இருந்து விண்ணப்பங்கள் வந்தன. நிகழாண்டு, 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் எட்டு பிரிவுகளில் வெற்றியாளா்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அந்த 36 கிராமங்களில் ஜம்மு-காஷ்மீரின் அரு (சாகச சுற்றுலா), கேரளத்தின் குமரகோம் (வேளாண் சுற்றுலா), மத்திய பிரதேசத்தின் பிரான்பூா் (கைவினை), மணிப்பூரின் ஆண்ட்ரோ (பாரம்பரியம்) மற்றும் லடாக்கின் தாா் கிராமம் (பொறுப்புமிக்க சுற்றுலாத் தலம்) ஆகியவை அடங்கும்.