மகாராஷ்டிரத்தில் அலுவலகக் கழிப்பறையில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் ஒரு முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நிதின் எட்வின் மைக்கேல் என்பவர் வெள்ளிக்கிழமையில், தனது அலுவலக கழிப்பறைக்குள் சென்றுள்ளார். ஆனால், நேரமாகியும் பணியிடத்திற்கு எட்வின் வராததால், சக பணியாளர்கள் சந்தேகமடைந்து, கழிப்பறைக்குள் சென்று பார்த்தபோது, எட்வின் கீழே கிடந்துள்ளார்.
இதனையடுத்து, அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தும், எட்வின் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாரடைப்பின் காரணமாக தற்செயலான மரணம் என்றே கூறியுள்ளனர்.
இருப்பினும், எட்வின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடப்பதாகக் கூறினர். எட்வினுக்கு ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார்.
சமீபகாலமாக, பல அலுவலகங்களில் பணிநேரங்களில் உயிரிழக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், தாய்லாந்தில் செப். 13 ஆம் தேதியில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர், உடல்நிலை சரியில்லாததால், மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால், மேலாளர் விடுப்பு தராததையடுத்து, அலுவலகம் வந்த ஊழியர், அலுவலகம் வந்த சில நிமிடங்களிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மற்றொரு சம்பவமாக, இந்திய மாநிலமான லக்னௌவில் செப். 24 ஆம் தேதியில், எச்.டி.எஃப்.சி. வங்கி ஊழியர் ஒருவர், அலுவலகத்தில் பணிநேரத்திலேயே உயிரிழந்துள்ளார். அவர் தூங்கிக் கொண்டிருப்பதாய் நினைத்த நிலையில், அவர் இறந்து விட்டார் என்பது தெரியாமல் சக பணியாளர்கள் இருந்துள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தில் புணேவில் எர்ன்ஸ்ட் அன் யங் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவரும் பணி அழுத்தத்தால் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கின்போது, அலுவலகத்தில் இருந்து ஒருவர்கூட வரவில்லை என அவரது தாயார் ஆதங்கம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.