நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 114-வது அத்தியாயத்தில், பிரதமர் மோடி ஆற்றிய உரையில், மனதின் குரலில் மீண்டும் உங்களோடு இணைய, மீண்டுமொரு சந்தர்ப்பம். நம்முடைய மனதின் குரலுக்கு பத்து வயதாகி விட்டது; பத்தாண்டுகள் முன்பாக மனதின் குரல் அக்டோபர் 3ஆம் தேதியன்று, விஜயதசமி நன்னாளன்று தொடங்கப்பட்டது. அந்த நாள் எத்தனை புனிதமான நாள்! இது இயல்பாக அமைந்த ஒன்று.
இதோடு கூடவே, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதியன்று நாம் மனதின் குரலின் பத்தாண்டுகளை நிறைவு செய்யும் அதே வேளையிலே, நவராத்திரி புண்ணிய காலத்தின் முதல் நாளுமாகவும் இருக்கும். மனதின் குரலின் இந்த நீண்டநெடிய பயணத்திலே பல கட்டங்களை என்னால் மறக்க இயலாது. எனது அமெரிக்கப் பயணத்தின் போது அமெரிக்க அரசு இந்தியாவிடம் கிட்டத்தட்ட 300 தொன்மையான கலைப்படைப்புக்களைத் திருப்பிக் கொடுத்தது.
அமெரிக்க குடியரசுத் தலைவர் பைடன், டெலாவேரில் உள்ள தன்னுடைய தனிப்பட்ட இல்லத்தில் இவற்றில் சில கலைப்படைப்புக்களை என்னிடத்தில் காட்டினார். திருப்பிக் கொடுக்கப்பட்ட கலைப்படைப்புக்கள், சுடுமண்பாண்டம், கல், யானையின் தந்தம், மரம், வெண்கலம், செம்பு போன்றவற்றால் ஆனவையாக இருந்தன. இவற்றில் பல 4000 ஆண்டுகள் பழைமையானவை.
4000 ஆண்டுகள் பழைமையானவை தொடங்கி, 19ஆம் நூற்றாண்டு வரையிலான கலைப்படைப்புகளை அமெரிக்க திரும்பக் கொடுத்திருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே தேசத்தின் பல்வேறு பாகங்களில் கடும்மழை பெய்துவருகிறது. நீர் சேமிப்பு எத்தனை மகத்துவம் வாய்ந்தது, நீரைச் சேமித்து வைப்பது எத்தனை அவசியமானது என்பதை இந்த மழைக்காலம் நமக்கு அறிவுறுத்துகிறது.
மழைக்கால நாட்களில் சேமிக்கப்படும் நீரானது, நீர் தட்டுப்பாடு மாதங்களில் மிகவும் உதவிகரமாக இருக்கிறது, இது தான் மழைநீரைச் சேமிப்போம் போன்ற இயக்கங்களின் உணர்வாகும் என்றார்.