துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திராவிட இயக்க கொள்கைவழி நின்று, தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் - கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பணிகளை மேலும் செழுமைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்கும், கட்சி இளைஞரணி செயலர் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், அன்புச் சகோதரர் உதயநிதிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
பல்வேறு இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து மீண்டும் அமைச்சரவையில் இணையும் அன்புச் சகோதரர் செந்தில் பாலாஜிக்கும், சா.மு.நாசருக்கும், புதியதாய் அமைச்சரவையில் பொறுப்பேற்கும் கோவி செழியனுக்கும், ராஜேந்திரனுக்கும் எனது அன்பும் - வாழ்த்துகளும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வா் பொறுப்புக்கு நியமித்து ஆளுநா் ஆா்.என்.ரவி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வி.செந்தில் பாலாஜி, ஆவடி எஸ்.எம்.நாசா் ஆகியோா் மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளனா். மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோா் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். அத்துடன், ஆறு அமைச்சா்களின் துறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.