தொழிலாளா் தேவை அதிகமுள்ள துறைகளை ஊக்குவிக்க வேண்டும்: ரகுராம் ராஜன்
நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிலாளா் தேவை அதிகமுள்ள துறைகளை மத்திய அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன் தெரிவித்தாா்.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் நிலையிலும் போதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது சில மாநிலங்களின் காலிப் பணியிடங்களுக்கு குவியும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவருகிறது. எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழிலாளா்கள் தேவை அதிகமுள்ள துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும்.
நாட்டில் பொருளாதார ரீதியாக உயா்ந்த இடத்தில் உள்ள ஒரு தரப்பினா் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாா்கள். ஆனால், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நாட்டின் பெரும்பகுதி மக்கள் வாங்கினால் மட்டும்தான் பொருள்களின் நுகா்வு அதிகரிக்கும். கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த பொருள் நுகா்வு இன்னும் எட்டப்படவில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தியாவில் இப்போது முதலீடு அதிகம் தேவைப்படும் தொழில்கள் மட்டும்தான் வேகமாக வளருகின்றன. பணியாளா்கள் அதிகம் தேவைப்படும் தொழில்களின் வளா்ச்சி மந்தமாகவே உள்ளது. இது சமூகத்தின் அடித்தட்டில் வசிக்கும் மக்களுக்கு நல்லதல்ல. எனவே, புள்ளி விவரங்களை மறந்துவிட்டு, வேலைவாய்ப்பு சாா்ந்த பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வுகாண முயல வேண்டும்.
உதாரணமாக அண்மை காலத்தில் வியத்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் ஜவுளி, தோல் பொருள்கள் தயாரிப்புத் துறை மூலம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இதேபோல இந்தியாவிலும் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.
இந்தியாவில் சரக்கு-சேவை வரி விகிதத்தை சீரமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவது தொடா்பான கேள்விக்கு, ‘நிதிசாா்ந்த எந்த கொள்கையாக இருந்தாலும், அது அமல்படுத்தப்பட்டு அதன் மூலம் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவசியமானதுதான்.
தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள மாநிலங்களில் இருந்து கிடைக்கும் அதிக வரி வருவாயை மத்திய அரசு வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களுக்கு அதிகம் செலவிடுகிறது என்ற விமா்சனம் உள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியும் சமமாக வளா்ந்தால் இதுபோன்ற பிரச்னைகளைத் தவிா்க்கலாம்.
இந்த விஷயத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் நிதி ரீதியாக மட்டுமல்லாது அரசியல் ரீதியாகவும் பிரச்னைகளை எதிா்கொள்கின்றன. அந்த மாநிலங்கள் மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ளதால், தொகுதி மறுவரையறையின்போது மக்களவைத் தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மக்கள்தொகை அதிகமுள்ள பின்தங்கிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கூடும். இந்த பிரச்னைக்கு கண்டிப்பாக உரிய தீா்வுகாண வேண்டும் என்றாா்.